சாத்தான்குளம் அருகே பீரோவில் வைத்திருந்த 100 பவுன் நகை திருடுபோன சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சாத்தான்குளம் அருகே உள்ள சுப்பிரமணியபுரம் சங்க தெருவைச் சேர்ந்த தங்கவேல் என்பவரின் மனைவி ஜெயராணி (55). கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில், ஈரோடு அணைக்கட்டு ஆலம்பட்டி வலசு பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், இவருடைய நூறு பவுன் தங்க நகையை சாத்தான்குளம் அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தில் வசிக்கும் அவரது தாயார் சண்முக கனி அம்மாளிடம் கொடுத்து சாத்தான்குளம் கூட்டுறவு கடன் சங்கத்தில் உள்ள லாக்கரில் வைத்து பாதுகாத்து வந்துள்ளார்.
இதையடுத்து சுப்பிரமணியபுரத்தில் உள்ள முத்தாரம்மன் கோயிலில் கடந்த 29ஆம் தேதி முதல் 1ஆம் தேதி வரை கொடை விழா நடைபெற்றது. அப்போது ஜெயராணி குடும்பத்துடன் ஊருக்கு வந்திருந்தார். இதைத் தொடர்ந்து லாக்கரில் வைத்திருந்த 100 பவுன் நகையை எடுத்து பயன்படுத்தியுள்ளனர்.
திருவிழா முடிந்ததும் 100 பவுன் நகையை கூட்டுறவு வங்கி லாக்கரில் வைக்கக்கூறி அவரது தங்கை மகள் பவித்ரா தேவியிடம் கொடுத்து விட்டு ஈரோடு சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டு பீரோவில் வைத்திருந்த 100 பவுன் நகை திருடு போனது தெரியவந்தது.
இதுகுறித்து பவித்ரா, ஜெயராணிக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஊருக்கு வந்த ஜெயராணி, தட்டார்மடம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் பௌலோஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்