குடிசைகளை அகற்றிய அதிகாரிகள் - நடுத்தெருவில் நின்ற நரிக்குறவர்கள்

குடிசைகளை அகற்றிய அதிகாரிகள் - நடுத்தெருவில் நின்ற நரிக்குறவர்கள்
குடிசைகளை அகற்றிய அதிகாரிகள் - நடுத்தெருவில் நின்ற நரிக்குறவர்கள்
Published on

தங்குவதற்கு நிரந்தரம் இடம் வழங்கக்கோரி புதுச்சேரியில் 100க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரியை அடுத்த மதகடிப்பட்டில் வார சந்தை நடைபெறும் இடத்தில் 70க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் குடிசை வீடுகளை அமைத்து நீண்ட நாட்களாக வசித்து வந்தனர். இந்நிலையில் ஒவ்வொரு வாரமும் அப்பகுதியில் சந்தை நடைபெறுவதால் அங்குள்ள குடிசைகள் இடையூறாக இருப்பதாக பலரும் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இது குறித்து அங்கு வீடுகட்டியுள்ள நரிக்குறவர்களிடம் அதிகாரிகள் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், மாற்று இடம் கொடுத்தால் இடத்தை காலி செய்வோம் என நரிக்குறவர்கள் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. 

இதற்கிடையே, புதுச்சேரி முழுவதும் சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி, மதகடிப்பட்டு சந்தை அருகே கட்டப்பட்டிருந்த நரிக்குறவர்களின் குடிசை வீடுகளை நெடுஞ்சாலைத்துறை மற்றும் வருவாய்த்துறை அகற்றினர். மேலும் குடிசைக்காக அவர்கள் பயன்படுத்திய கீற்று, மூங்கில் உள்ளிட்ட பொருட்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

திடீரென்று வெளியேற்றப்பட்டதால் நரிகுறவ மக்கள் சாலையிலேயே தங்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து தங்களுக்கு நிரந்தர இடம் வழங்கவேண்டி வில்லியனூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நூற்றுக்கணக்கான நரிக்குறவர்கள் குடும்பத்தினருடன் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து 2 மணிநேரம் நடந்த போராட்டம் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் நரிக்குறவர்களுடன் பேசி சமாதானம் செய்து அவர்களை கலைத்தனர். மேலும் ஒரு பிரிவு நரிக்குறவ மக்கள், சமூகநலத்துறை அமைச்சர் கந்தசாமி வீடு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட நரிக்குறவர்களை சந்தித்த அமைச்சர் கந்தசாமி இரண்டு தினங்களில். மாற்று இடம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com