'100 கோடியை கொண்டுக்கிட்டு போறவங்கள எல்லாம் விட்டுடுவாங்க. நம்மள மாதிரி ஆளுங்களதான் பிடிச்சுக்குவாங்க'என்று தேசிய வங்கியை குற்றம்சாட்டி தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.
திண்டுக்கல்லில் இன்று மாற்றுத் திறனாளிகளுக்கான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டு, நவீன சக்கர நாற்காலிகள், இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் என மொத்தம் 265 பயனாளிகளுக்கு ரூ.31.73 லட்சம் மதிப்பிலான உபகரணங்களை வழங்கினார்.
இதைத்தொடர்ந்து மாற்றுத் திறனாளிகளிடம் வேறு ஏதாவது குறைகள் உண்டா? என அமைச்சர் கேட்டார். அப்போது வேடசந்தூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி லட்சுமணன், நாங்கள் அண்ணன் தம்பிகள் மூன்று பேர். தற்போது வெளியில் கடன் வாங்கி பெட்டிக்கடை வைத்துள்ளோம். அதனால் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி இருக்கிறோம். வங்கியின் மூலம் கடன் பெற்றால் சுலபமாக கட்ட முடியும் என்பதால் வேடசந்தூரில் உள்ள தேசிய வங்கியில் கடன் கேட்டோம்.
அதற்கு சொந்த இடம் அல்லது வீடு இருந்தால் தான் கடன்தர முடியும் இல்லை என்றால் பிச்சை எடுத்து பிழைத்து கொள்ளவும் என்று எங்களை அசிங்கப்படுத்தி அனுப்பி விட்டனர் என்று கூறினார். அதற்கு அமைச்சர், '100 கோடியை கொண்டுக்கிட்டு போறவங்கள எல்லாம் விட்டுடுவாங்க. நம்மள மாதிரி ஆளுங்களதான் பிடிச்சுக்குவாங்க' என்று கூறினார்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியரிடம் இதுகுறித்து கேட்டார். அதற்கு ஆட்சியர், 75 ஆயிரம் லோன் வழங்கப்படுகிறது. அதில் 50 ஆயிரத்தை கட்டினால் போதும் 25 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது என்று கூறினார். இதுகுறித்து கலெக்டரிடம் மனு அளித்து வங்கிகளில் லோன் பெற்றுக்கொள்ளலாம் என்று அமைச்சர் சீனிவாசன் கூறியதோடு மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை விரைந்து வழங்க வேண்டுமென்று அலுவர்களுக்கு அறிவுறுத்தினார்.