தமிழ்நாட்டில் உள்ள சிறைகளில் பணியாற்றுவோர் மற்றும் தண்டனை பெற்ற கைதிகளுக்கு 100 சதவிகிதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சிறைத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா 2-வது அலை தமிழக சிறைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் சிறைகைதிகளை விட சிறைத்துறையைச் சேர்ந்தவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் சிறையில் பணிபுரிபவர்கள் 222 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 74 விசாரணை கைதிகளும், 16 தண்டனை கைதிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சிறைத்துறை பணியாளர்கள் 12 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். தற்போது 37 சிறைத்துறை பணியாளர்கள், 26 விசாரணை கைதிகள், 1 தண்டனை பெற்ற கைதி சிகிச்சை பெற்று வருவதாக சிறைத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா அறிகுறி தெரிந்தாலே அவர்கள் யாருடன் தொடர்பில் இருந்தார்கள்? என்பது தொடர்பான அனைத்து விவரங்களையும் சேகரித்து சிகிச்சை அளிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சிறைத்துறை தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வை தமிழக சிறைச்சாலைகளிலில் ஏற்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறைத்துறை டிஜிபி சுனில்குமார் சிங் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதுடன் மற்றவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இது தொடர்பாக அனைத்து சிறைத்துறை டிஐஜிக்கள், சிறைத்துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் சிறைத்துறை அதிகாரிகளுக்கு வீடியோ கான்பரன்ஸ் மூலமாக தொடர்புகொண்டு பேசிவருகிறார். மேலும், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோரின் உத்தரவின்பேரில் புதுக்கோட்டை போஸ்டல் சிறையில் கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கப்பட்டுள்ளது. இதனை தினமும் சிறைத்துறை டிஜிபி சுனில்குமார் சிங் ஆய்வு செய்துவருகிறார். சிறைகளில் எத்தனைபேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்கள்? கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தப்படுகிறதா? என்பது குறித்த அறிக்கையை அனைத்து சிறைத்துறை டிஐஜிக்களிடமும் சிங் கேட்டுள்ளார்.
தமிழக சிறைகளில் இதுவரை 4,197 சிறைத்துறை பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளதாக சிறைத்துறை தெரிவித்துள்ளது. தண்டனை பெற்ற கைதிகள் 4,099 கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதாகவும், தற்போது சிறைகளில் 100 சதவீதம் தடுப்பூசி போட்டுள்ளதாக தமிழக சிறைத்துறை தெரிவித்துள்ளது. விசாரணைக் கைதிகளில் 69 சதவீதம், அதாவது 7,616 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். யாருக்கெல்லாம் 2-வது டோஸ் போடவேண்டும்? சிறைக்குள் வருபவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறதா? மற்றும் கொரோனா பாதிக்கப்பட்டு குணமாகிய 3 மாதத்திற்கு பிறகு தடுப்பூசி போடுவற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதாக சிறைத்துறை தெரிவித்துள்ளது.