திருச்சி கொள்ளிடம் ஆற்றில் இன்று மாலை முதல் 10 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு தெரிவித்துள்ளார்
கோரையாறு - குடமுருட்டியாறு - உய்யக்கொண்டான் ஆறு ஆகிய மூன்று ஆறுகள் சங்கமிக்கும் குழுமியில் மழை நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. குழுமியில் உள்ள குழுமாயி அம்மன் கோவிலுக்கு செல்லும் பாதை முற்றிலும் நீரில் மூழ்கியுள்ளது. இதனை வேடிக்கை பார்க்க ஆபத்தை உணராமல் நூற்றுக்கு மேற்பட்ட பொது மக்கள் உய்யக்கொண்டான் தொட்டிப் பாலத்தின் மீது குவிந்த வண்ணம் உள்ளனர். அவர்களை அப்புறப்படுத்தும் பணியில் காவல்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். இந்த இடத்தை திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் முஜிபூர் ரகுமான், மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர்.
திருச்சி மாநகரத்தில் உள்ள மழை நீர் வேகமாக வடிவதற்கு ஏதுவாக, காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பது நிறுத்தப்படுகிறது. காவிரி ஆற்றில் திருச்சி முக்கொம்பு அணைக்கு ஒரு வினாடிக்கு வந்து சேரும் 10,000 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனை காவிரியில் திறக்காமல் கொள்ளிடம் ஆற்றில் இன்று மாலை 6 மணி முதல் திறக்கவுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு தெரிவித்துள்ளார். திருச்சியில் குடியிருப்புகளை மழைநீர் மழை நீர் சூழ்ந்து கொண்டதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.