பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவுகள் வெளியான நிலையில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் மற்றும் விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பிப்பது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.
10 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை, தாங்கள் பயின்ற பள்ளியில், வரும் 13 ஆம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம். அல்லது தனித்தேர்வர்கள் உட்பட அனைவரும் அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் https://dge.tn.gov.in/ மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு கோரும் மாணவர்கள் முதலில் விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்களை மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் வாயிலாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய மையங்கள் வழியிலும் விண்ணப்பிக்கலாம். வரும் 15 ஆம் தேதி காலை 11 மணி முதல், ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து 20 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பாடத்திற்கும் விடைத்தாள் நகல் பெறுவதற்கான கட்டணம் 275 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விடைத்தாள் நகல் விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டினை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்தோடு விடைத்தாளின் நகலை இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்வதற்கான நாள் மற்றும் இணையதள முகவரி பின்னர் அறிவிக்கப்படும் என சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககம் கூறியுள்ளது.