சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் முகேஷ் கோப்சந்தானி, மதுரையில் பத்து ரூபாய்க்கு சாப்பாடு வழங்கிய ராமு தாத்தாவின் உத்வேகத்தில் பத்து ரூபாய்க்கு சாப்பாடு வழங்கிவருகிறார் அவரது மறைவைப் பற்றி கேள்விப்பட்ட தொழிலதிபர், ராமு தாத்தாவின் பட்ஜெட் உணவகத்தைப் பற்றி அறிந்து அதேபோல சென்னையில் தொடங்கிவிட்டார். இந்த செய்தியை தி இந்து இணையதளம் வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக அவர் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். தன் குழுவினருடன் இணைந்து முப்பதே நாட்களில் ரிச்சி தெருவில் 345 சதுர அடியில் சமையல்கூடத்தை தன் குழுவினருடன் இணைந்து அமைத்துவிட்டார். ஆகஸ்ட் மாதம் தொடங்கிய ஹோட்டலில் தினமும் 100 சாப்பாடுகள் விற்பனையாகியது.
சாம்பார், ரசம், மோர், காய்கறிகள் அடங்கிய முழு சாப்பாடு பார்சல் பத்து ரூபாய்தான். மெல்ல பிரபலமடைந்துவரும் இந்த சாப்பாடு தினமும் 300 என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்த சேவையில் ஆறு பேர் வரை பணியாற்றிவருகிறார்கள். அடுத்த ஆறு மாதங்களில் அங்கேயே சாப்பிட்டால் ரூ. 30. பார்சல் சாப்பாடு ரூ. 10.
யார் அந்த ராமு தாத்தா?
மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே சிறிய பெட்டிக்கடை ஒன்றில் 10 ரூபாய்க்கு சாப்பாடு வழங்கி மதுரை மக்களின் நீங்காத அன்பையும், புகழையும் பெற்றவர் தான் 87 வயதான ராமு தாத்தா. 1957 ம் ஆண்டு வள்ளலாரின் சத்திய ஞான சபை வடலூருக்கு சென்றதன் விளைவால் வள்ளலாரைப் போல தானும் பொதுமக்களுக்கு உணவளித்து சேவை செய்ய வேண்டும் என்கிற ஆசையை வளர்த்துக்கொண்டார்.
ராமு தாத்தா
1967 ஆண்டு வெறும் ஒன்னே கால் ரூபாய்க்கு காய்கறி கூட்டுகளுடன் சாப்பாடு வழங்க தொடங்கினர். மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே பூக்கடைகள் அமைந்துள்ள பகுதியில் எதிரே சிறிய பெட்டிக்கடை ஒன்றில் தனது சிறிய அளவிலான உணவகத்தை நடத்திவந்தார். நாளடைவில் விலை வாசி உயர்வடைய 2 ரூபாய், 5 ரூபாய் எனச்சாப்பாடு வழங்கிய ராமு தாத்தா கடைசியாக 10 ரூபாய்க்கு தனது உணவகம் மூலம் சாப்பாடு வழங்கினார்.
முகேஷ் கோப்சந்தானி
வெறும் சாப்பாடு என்பது மட்டும் இல்லாமல் மூன்று வகை காய்கறி கூட்டுக்களோடு 10 ரூபாய்க்கு உணவு கொடுத்து வந்தவர். 4 ஆண் பிள்ளைகள் 3 பெண் பிள்ளைகள் இருந்த போதிலும், தனது சேவைப்பணியை விட்டு விடாமல் தொடர்ந்து செய்தார். இவருடைய சேவைக்கு அவருடைய மனைவி பூரணத்தம்மாளும் மிக முக்கிய காரணம். சில ஆண்டுகளுக்கு முன் மனைவி இறந்துவிட 89 வயதை கடந்த ராமு தாத்தா, ஜூலை மாதம் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.