“8 கோடி பணம், 1.5 கிலோ தங்க நகைகள்” போதையில் உளறிய ‘குடி’மகன்... கொலை செய்த கும்பல்

“8 கோடி பணம், 1.5 கிலோ தங்க நகைகள்” போதையில் உளறிய ‘குடி’மகன்... கொலை செய்த கும்பல்
“8 கோடி பணம், 1.5 கிலோ தங்க நகைகள்” போதையில் உளறிய ‘குடி’மகன்... கொலை செய்த கும்பல்
Published on

சென்னையில் கோடிக்கணக்கில் பணம் கிடைத்ததாக மதுபோதையில் உளறியவரை 10 பேர் கொண்ட கும்பல் கொலை செய்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. 

சென்னை தாம்பரம் அடுத்த மூகாம்பிகை நகரில் குடும்பத்துடன் வசித்து வருபவர் முருகன்(50). இவர் கடந்த 21-ம் தேதி முடிச்சூர் சாலை, லட்சுமிபுரம் டாஸ்மாக் மதுக்கடையில் தனது நண்பருடன் அமர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது தனக்கு ஒரு இருசக்கர வாகனம் கிடைத்தது என்றும் அதில் ஒரு பையில் 8 கோடி ரூபாய் பணம், 1.5 கிலோ தங்க நகைகள் இருந்தது என்றும் போதையில் உளறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் மது அருந்தியதற்காக 2000 ரூபாயை கொடுத்துவிட்டு மீதி பணத்தை டிப்ஸ் கொடுத்து பந்தா காட்டியுள்ளார்.

இதனை, அவருக்கு பக்கத்து நாற்காலியில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த தாம்பரம் கிருஷ்ணா நகரை சேர்ந்த முனியாண்டி என்பவர் கேட்டதாக தெரிகிறது. முருகன் பணத்தை வாரி வழங்கியதால் அவர் பேசியதை உண்மை என நம்பியுள்ளார் முனியாண்டி. உடனே முனியாண்டி, முருகனை பின் தொடர்ந்து சென்று அவரது வீட்டை கண்டுபிடித்துள்ளார். பின்னர் இந்த தகவலை அருண்பாண்டியன் என்பவரிடம் தெரிவித்துள்ளார். 

அதன் பேரில் கடந்த 22ம் தேதி அருண்பாண்டியன், முனியாண்டி, மற்றும் விக்னேஷ் ஆகியோர் முருகனின் வீட்டிற்கு சென்று தாங்கள் போலீஸ் எனக்கூறி மிரட்டி பணம் மற்றும் நகைகளை கேட்டுள்ளனர். பணத்தை தாம்பரம் குப்பை மேட்டில் புதைத்து வைத்திருப்பதாக கூறி குப்பையில் தேடியுள்ளார் முருகன். அப்போது முருகனை பாம்பு கடித்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். 

பின்னர், கடந்த 25-ம் தேதி கோவிலம்பாக்கத்தில் 10 பேர் கொண்ட கும்பல் முருகன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் பணம், நகைகளை கேட்டு, அடித்து துன்புறுத்தி கொடுமைபடுத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த முருகன் உயிரிழந்தார்.
 இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. வழக்குப் பதிவு செய்த போலீசார் கோவிலம்பாக்கத்தை சேர்ந்த ஜானகிராமன்(38), கந்தன்(38), குமார்(37), புருசோத்தமன் (35), பாரதி(40) உட்பட 10 பேரை கூண்டோடு கைது செய்தனர். அவர்களிடமிருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய நான்கு கார்கள், இரும்பு கம்பி ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன. 

மேலும் 8 கோடி ரூபாய் பணம், 1.5 கிலோ தங்கம் கிடைத்தது உண்மையா? பொய்யா? போதையில் உளறியதா? என்று முருகன் குடும்பத்தினரிடம் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com