கடலூர் நாட்டுவெடி தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டுமென சிபிஐ (எம்) வலியுறுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே, குருங்குடி என்ற கிராமத்தில் இயங்கி வந்த நாட்டு வெடி தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 7 பெண்கள் உயிரிழந்துள்ளனர்; 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் என்ற துயரச் செய்தி பெரும் வேதனையை அளிக்கிறது. இந்த வெடிவிபத்தில் கட்டடங்கள் தரைமட்டமாகி உள்ளன.
இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது எனவே மீட்புப்பணிகளை தீவிரமாக முடுக்கி விட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.
மாநிலம் முழுவதும் இதுபோன்ற நாட்டுவெடி மற்றும் பட்டாசு தொழிற்சாலைகளில் வெடி விபத்து ஏற்படா வண்ணம் பாதுகாப்பு நடைமுறைகளை உறுதி செய்திட வேண்டும். நகரத்தின் மையப்பகுதியில் இதுபோன்ற தொழிற்சாலைகளுக்கு அனுமதி மறுப்பதுடன், ஆள்நடமாட்டமில்லாத நகரத்தின் ஒதுக்குப்புறமான இடங்களில் அனுமதி பெற்று தயாரிப்பதை தமிழகஅரசு உறுதி செய்திட வேண்டும்.
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆழ்ந்த இரங்கலையும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது. மேலும் நடைபெற்ற வெடிவிபத்து குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தமிழக அரசு தலா ரூ. 2 லட்சம் அறிவித்துள்ளது. இது போதுமானதல்ல. எனவே உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நஷ்ட ஈடு வழங்கிட வேண்டுமெனவும், படுகாயமுற்று உயிருக்காக போராடிக் கொண்டிருக்கும் தொழிலாளர்களுக்கு உயர் சிகிச்சை அளிப்பதோடு, உரிய இழப்பீடும் வழங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.
மேலும் தீபாவாளி மற்றும் பண்டிகை காலங்கள் நெருங்குவதால் பட்டாசு தயாரிப்பு ஆலைகளில் அரசின் விதிமுறைகளை கறாராக அமல்படுத்துவதற்கும், வெடிவிபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை தடுப்பதற்கும் தமிழக அரசு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும், அரசின் விதிமுறைகளை மீறுபவர்கள் மீதும், கடமையை செய்யத் தவறும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.