மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய நிர்வாகிகள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்றது. அதில், கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அப்போது, தேர்தல் வியூகம் வகுத்த சுரேஷ் அய்யர் மீது பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
இதில், காரசாரமான விவாதமும் நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, மக்கள் நீதி மய்யத்தில் இருந்து துணைத் தலைவர் மகேந்திரன் விலகுவதாக அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, கட்சியை புனரமைக்கும் வகையில், துணை தலைவர் பொன்ராஜ், பாண்டிச்சேரி துணைத் தலைவர் தங்கவேலு, பொதுச் செயலாளர்கள் சந்தோஷ்பாபு, சி.கே.குமரவேல், முருகானந்தம், மவுரியா மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர் உமாதேவி ஆகியோர் பதவி விலகலுக்கான கடிதத்தை அளித்துள்ளனர்.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தில் ஜனநாயகமே இல்லை எனவும், தேர்தல் தோல்விக்குப் பிறகும் கமல்ஹாசன் அணுகுமுறையில் மாற்றம் ஏற்படும் என்கிற நம்பிக்கை இல்லாததாலேயே கட்சியில் இருந்து விலகுவதாக மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
10 பேர் ராஜினாமா தொடர்பான மக்கள் நீதி மய்யம் சார்பிலும் அறிக்கை ஒன்று வெளியானது. அதில் நிர்வாகிகளின் ராஜினாமாவை ஏற்பது குறித்து தலைவரே முடிவு செய்வார் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.