விருதுநகரைச் சேர்ந்த இளைஞர்கள் தென்காசி வரை இருசக்கர வாகனப் பந்தயத்தில் ஈடுபட முடிவு செய்து தனியார் அவசர ஊர்தியை வாடகைக்கு எடுத்துள்ளனர். பின் போக்குவரத்து நெரிசலுக்கு இடையே வாகனப் பந்தயத்தில் ஈடுபட முயன்ற அவர்கள், அவசர ஊர்தி ஓட்டுநரிடம் சைரனை அலற விட்டவாறு வேகமாக செல்ல அறிவுறுத்தியுள்ளனர்.
அதன்படி அவர்கள் செல்கையில், திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் தென்காசி நோக்கி அதிவேகமாக சென்றுள்ளனர். இந்த இளைஞர்கள் குறித்து சிவகிரி காவல் துறையினர் தென்காசி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி குத்துக்கல்வலசை பகுதியில் காத்திருந்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார், அதிவேகமாக வந்த அவசர ஊர்தியை தடுத்து நிறுத்தினர்.
அதைத் தொடர்ந்து வந்த 10 இருசக்கர வாகனங்களையும் பிடித்த காவல் துறையினர் இளைஞர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது குற்றாலத்துக்கு சுற்றுலா செல்ல முடிவெடுத்த இளைஞர்கள், விபரீத இருசக்கர வாகனப் பயணத்தில் ஈடுபட முயன்றது தெரியவந்தது.