மதுரை மாவட்டத்தில் 209 கிராம உதவியாளர் பதவிக்கான தேர்வு வினாத்தாள்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள 11 தாலுகாக்களிலும் காலியாக உள்ள 209 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த நவம்பர் 7ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட 11 தாலுகாவிற்குள் 22 தேர்வு மையங்களில் தமிழ் மற்றும் ஆங்கில மொழி எழுத்தறிவுத் தேர்வு நடைபெறவுள்ளது.
இந்நிலையில், விண்ணப்பத்திருந்த ஏராளமான பட்டதாரி இளைஞர்கள், பெண்கள் தேர்வு எழுத காத்திருந்த நிலையில், திடீரென நள்ளிரவில் கிராம நிர்வாக உதவியாளர் தேர்விற்காக மதுரை தெற்கு வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தேர்வு மையத்தில் இருந்த ஆங்கில திறனறிவுத் தேர்வுக்கான வினாத்தாள்களை சிலர் சமூக வலைதளங்களின் மூலமாக அனுப்பியதோடு மொத்த வினாத்தாள்களையும் பெற 10ஆயிரம் ரூபாய் பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து தற்போது சமூக வலைதளங்களில் வினாத்தாள்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மதுரை ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது, அதில், கிராம உதவியாளர் தேர்வுக்கான வினாத்தாள்கள் மாற்றப்பட்டு காலை நடைபெறும் தேர்வில் புதிதாக தயாரிக்கப்பட்ட வினாத்தாள்கள் கொடுக்கப்படும் என தெரிவித்தார். வினாத்தாள்களை கசிய விட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.