தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் 10,000 கட்டுமான தொழிலாளர்களுக்கு வீட்டுவசதி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார், தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (15.11.2022) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமான தொழிலாளர்களில், ஆண்டுதோறும் 10,000 கட்டுமான தொழிலாளர்களுக்கு 400 கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டுவசதித் திட்டத்தை தொடங்கி வைக்கும் வகையில், முதற்கட்டமாக 104 பயனாளிகளுக்கு 2.40 கோடி ரூபாய்க்கான வீட்டுவசதித் திட்ட ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, 5 கட்டுமான தொழிலாளர்களுக்கு ஆணைகளை வழங்கினார்.
தமிழ்நாடு அரசால் கட்டுமான தொழில்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலன் காக்க தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் தோற்றுவிக்கப்பட்டது. இதன் மூலமாக தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு, கண்கண்ணாடி, ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம், விபத்து ஊனம், இயற்கை மரணம், தனிநபர் விபத்து மரணம், பணியிடத்தில் விபத்து மரணம், வீட்டு வசதி நலத் திட்ட உதவித் தொகை போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் 2021-22ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற, சொந்தமாக வீடு இல்லாத கட்டுமானத் தொழிலாளர்களுக்கு, அவர்கள் சொந்தமாக வீட்டுமனை வைத்திருந்தால் அவர்களாகவே வீடு கட்டிக்கொள்ள நிதியுதவி வழங்குவது அல்லது வீட்டுமனை இல்லாதவர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் ஏற்கனவே கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற நிதிஉதவி அளிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் சார்பில் ஆண்டுதோறும் 10,000 பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு நபர் ஒருவருக்கு அதிகபட்சமாக 4 இலட்சம் ரூபாய் வரை வீட்டுவசதித் திட்ட நிதி உதவித்தொகை வழங்கும், 400 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தை தொடங்கி வைத்திடும் வகையில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இன்று 5 கட்டுமான தொழிலாளர்களுக்கு வீட்டுவசதித் திட்ட ஆணைகளை வழங்கினார்.
முதலமைச்சரின் அறிவுரைக்கேற்ப வாரியத்தில் நிலுவையில் உள்ள கேட்பு மனுக்கள் விரைந்து ஒப்புதல் அளிக்கப்பட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவித் தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. (7.05.2021) முதல் (31.10.2022) வரை தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் 4,27,176 பயனாளிகளுக்கு 322 கோடியே 78 இலட்சத்து 94 ஆயிரத்து 867 ரூபாய்க்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், (7.05.2021) முதல் (31.10.2022) வரை தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் புதிதாக 7,71,666 தொழிலாளர்கள் உறுப்பினர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.சி.வெ.கணேசன், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத் தலைவர் திரு.பொன்குமார், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.முகமது நசிமுத்தின், இ.ஆ.ப., முதன்மைச் செயலாளர் / தொழிலாளர் ஆணையர் முனைவர் அதுல் ஆனந்த், இ.ஆ.ப., தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் செயலாளர் திருமதி.ஆர். செந்தில்குமாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.