செய்தியாளர்: சுரேஷ் குமார்
திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி விஜய லலிதாம்பிகை தலைமையிலான அதிகாரிகள் தென்னம்பாளையம் சந்தையில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட ஒரு டன் மாம்பழங்களை பறிமுதல் செய்து அழித்தனர். இதே போன்ற மாம்பழங்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.
மேலும், செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் தொடர்பாக 102 கடைகளில் ஆய்வு செய்தபோது 12 கடைகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டது. செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 300 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டதோடு சம்பந்தப்பட்ட கடைகளுக்கு நோட்டீஸூம் வழங்கப்பட்டது. குளிர்பானம் மற்றும் ஐஸ்கிரீம் கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. 35 கடைகளில் ஆய்வு செய்த நிலையில், 5 கடைகளில் விதிமீறல் கண்டறியப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
தற்காலிக கடைகள் மற்றும் நிரந்தர கடைகள் வைத்திருப்போர் உணவு பாதுகாப்புத் துறையின் உரிமம் பதிவு சான்றிதழ் பெற foscos.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். புகார்களை 94440 42322 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.