கூலித் தொழிலாளி தவறவிட்ட பணப் பையை, ஆதார் அட்டை விவரத்தின்படி திரும்ப ஒப்படைக்க உதவியாக இருந்த ஒன்றாம் வகுப்பு மாணவனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
மதுரை மாவட்டம் உசிலம்படியைச் சேர்ந்த சக்தி அபிஷேக், அதேபகுதியில் உள்ள பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். வீதியில் பணப்பை ஒன்றை கண்டெடுத்த அச்சிறுவன், அதை தாயிடம் கொடுத்து, உரியவரிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். பையை ஆராய்ந்தபோது அதில் ரூ.4,650 பணமும், ஒரு ஆதார் அட்டையும் இருந்துள்ளது. ஆதார் அட்டையில் இருந்த தகவல் அடிப்படையில் பணப்பையை தவறவிட்டவர், பாலார்பட்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பரமன் என்பது தெரியவந்தது.
பரமனின் வீட்டை கண்டறிந்த சிறுவனின் தந்தை, அதனை காவல்துறையினரின் ஒத்துழைப்புடன் திரும்ப ஒப்படைத்தார். தவறவிட்ட பணப்பை திரும்பக் கிடைக்க உறுதுணையாக இருந்த சிறுவனுக்கு, கூலித் தொழிலாளி பரமன் நன்றி தெரிவித்துள்ளார். சிறு வயதிலேயே நேர்மையுடன் செயல்பட்ட ஒன்றாம் வகுப்பு மாணவன் சக்தி அபிஷேக்கை அப்பகுதியினர் பாராட்டி வருகின்றனர். அத்துடன் காவல்துறையினரும் பாராட்டியுள்ளனர்.