சென்னை தியாகராய நகர் நகைக் கடையில் இருந்து ஒன்றே கால் கிலோ நகைகள் மாயமானது குறித்து கடை ஊழியர்கள் இருவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்தவர் ஷானிக் நாகர். இவர் தி.நகரில் நகைக்கடை வைத்துள்ளார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் நகை இருப்பு விவரப் பட்டியலை சரிபார்த்தபோது 1 கிலோ 300 கிராம் நகைகள் குறைவாக இருந்தது. கடை விற்பனை பிரிவு ஊழியர்கள் நித்திஷ் கத்தோடு, நிர்மல் கத்தோடு் ஆகியோர் நகைகளை திருடியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இருவரையும் பாண்டிபஜார் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிதிஷ் கத்தோடு, நிர்மல் கத்தோடு் இருவரும் கடை உரிமையாளர் ஷானிக் நகரின் தூரத்து் உறவினர்கள் என்பதும், கடந்த 6 மாதத்துக்கு முன் பணியில் சேர்ந்ததும் தெரியவந்தது. கடையில் இருந்து உண்மையிலே நகைகள் திருட்டுப்போனதா? அல்லது வருமான வரித்துறையிடம் இருந்து தப்பிக்க கடை உரிமையாளர் நாடகமாடுகிறாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது. இதுதொடர்பாக கடையில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். கடைக்கு சென்று விசாரித்த போது இது தொடர்பாக எதுவும் கூற முடியாது என்று தெரிவித்து விட்டனர். இதனைதொடர்ந்து கடை ஊழியர்களிடம் காவல்துறையினர் கிடுக்குப்பிடி விசாரணை செய்து வருகின்றனர்.