சென்னையில் 1,800 லிட்டர் மெத்தனால் பறிமுதல்... கள்ளக்குறிச்சி சம்பவத்துடன் தொடர்பா?

சென்னையில் 1,800 லிட்டர் மெத்தனால் பறிமுதல் செய்த விவகாரத்தில் சிவக்குமார் என்பவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
சிவக்குமார்
சிவக்குமார்pt web
Published on

சென்னையில் 1800 லிட்டர் மெத்தனால் பறிமுதல் செய்த விவகாரத்தில் சிவக்குமார் என்பவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. சிறப்புக் காவல்படை அதிகாரிகளால் பிடிக்கப்பட்டு, பின்னர் அமலாக்கப்பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட சிவக்குமார், சற்று முன்னர் சிபிசிஐடி அதிகாரிகளிடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தில் இதுவரை 55க்கும் மேற்பட்ட நபர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் இரு வழக்குகளைப் பதிவு செய்து அதில் ஒன்றை கொலை வழக்காக பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய, கண்ணுக்குட்டி என்ற கோவிந்தராஜன், தாமோதரன், விஜயா, சின்னத்துரை, சாஹூல் ஹமீது, மாதேஷ், ராமர், சக்திவேல், கண்ணன் ஆகியோர் உட்பட 11 நபர்களை சிபிசிஐடி அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இச்சம்பவத்தில் இன்னும் யார்யாருக்கெல்லாம் தொடர்புடையது என்ற தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிவக்குமார்
கள்ளக்குறிச்சி விஷ சாராயம்: மேலும் இருவர் கைது!

தற்போது சிபிசிஐடி மட்டுமல்லாது, மாவட்ட காவல்துறையினர், மதுவிலக்கு அமலாக்கத்துறை காவல்துறையினர் போன்றோர் தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்துவதற்கான தீவிரப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இத்தகைய சூழலில்தான், ரெட் ஹில்ஸ் பகுதியில் 4 நபர்கள் மெத்தனாலை வாகனத்தில் எடுத்து வந்ததை அடுத்து, அவர்களை மதுவிலக்கு அமலாக்கத்துறை காவல்துறையினர் பிடித்து விசாரணை செய்தனர். முடிவில் அவர்களிடம் இருந்து 1800 லிட்டர் மெத்தனாலை பறிமுதல் செய்தனர். இவர்கள், சென்னை எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரிடம் இருந்துதான் மெத்தனாலை வாங்கியதாக தெரிவித்திருந்தனர்.

சிவக்குமார்
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு; சென்னையில் பதுங்கி இருந்த முக்கிய குற்றவாளி கைது

இதனை அடுத்து மதுவிலக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள், சிவக்குமாருக்கும் கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் விவகாரம் தொடர்பாக ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்பதை அறிய சிபிசிஐடி அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர். சிபிசிஐடி அதிகாரிகள் சிவக்குமாரை தங்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டதன் அடிப்படையில், மதுவிலக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சிவக்குமாரை ஒப்படைத்துள்ளனர். அவரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்திற்கும், அதுதொடர்பாக தற்போது சிறையில் இருப்பவர்களுக்கும், சிவக்குமாருக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்தான விசாரணையில் சிபிசிஐடி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com