தமிழகத்தின் 90 சதவீத வேலைகளை தமிழர்களுக்கே வழங்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என சமூக வலைத்தளமான ட்விட்டரில் கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னை சென்ட்ரல் எம்.ஜி.ஆர் ரயில் நிலையத்திற்கு வெளியே இன்று தமிழ் தேசிய பேரியக்கம் சார்பில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில், தமிழக வேலைகளை தமிழர்களுக்கே வழங்க வேண்டும் எனவும், அதற்காக தனியாக சட்டம் இயற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. வெளிமாநிலத்தவர்கள் தமிழக உள்ளூர் வேலைகளில் அமர்வதால், படித்த தமிழக இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருப்பதாகவும் வலியுறுத்தப்பட்டது. இந்தப் பேரணியில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் சமூக வலைத்தளமான ட்விட்டரில் தமிழக வேலை தமிழருக்கே என்ற ஹேஸ்டேக்குகள் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்த ஹேஸ்டேக் மூலம், தமிழக இளைஞர்களின் வேலையில்லா நிலை குறித்தும், வெளிமாநிலத்தவர்கள் தமிழக வேலைகளில் இருப்பது குறித்தும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. மேலும், மற்ற மாநிலங்களில் இயற்றப்பட்டிருப்பது போல மாநில வேலைகளை சொந்த மாநிலத்தவர்களுக்கே வழங்கும் வகையில் சட்டம் இயற்றவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.