புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே தச்சங்குறிச்சி கிராமத்தில் தமிழகத்தில் இந்தாண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி வெகு சிறப்பாக நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள தூய அடைக்கல அன்னை ஆலய புத்தாண்டு மற்றும் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8.30 மணிக்கு தொடங்கியது. போட்டியை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். புதுக்கோட்டை ,திருச்சி, தஞ்சை, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட மொத்தம் 500 காளைகள் அவிழ்க்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டியில் வாடிவாசலில் இருந்து சீறி பாயும் காளைகளை காளையர்கள் போட்டி போட்டுக் கொண்டு அடக்கும் காட்சிகள் பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.
இந்நிலையில், இந்த வருடத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டிகள் தச்சங்குறிச்சியில் சிறப்பாக முடிவடைந்துள்ளது. விழாவில் சிறந்த மாடுபிடி வீரராக, 17 காளைகளை பிடித்து அசத்திய தென்னலூரை சேர்ந்த யோகேஸ்வரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். மற்றும் மருதகுடி ராஜ்குமாரின் காளை, சிறந்த காளையாக தேர்வுசெய்யப்பட்டது. முதலிடம் பெற்றவருக்கு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.