தமிழகத்திற்கு அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் காவிரி நீர், வீணாக கடலில் கலப்பதற்கு காரணம் நீர் மேலாண்மை குறித்து அதிமுக அரசுக்கு தொலைநோக்கு பார்வை இல்லாததே என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இரண்டு முறை மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியும், அதிலிருந்து திறந்துவிடப்படும் நீர் விவசாயம், குடிநீருக்கு பயன்படாமல் வீணாக கடலில் கலப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது என தெரிவித்துள்ளார். காவிரி டெல்டா பகுதியில் ஏரிகளும், குளங்களும் முறையாக தூர்வாரப்படாத காரணத்தால், 2 லட்சம் கன அடி நீர் திறந்தும் கூட குளங்களும், ஏரிகளும் நிரம்பவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
Read Also -> கேரளாவுக்கு நிதியளித்த நரிக் குறவர்கள் !
திருவாரூரில் உள்ள ஐநூற்று பிள்ளையார் கோவில் குளம் இன்னும் வறண்டு காட்சியளிப்பது, அதிமுக அரசின் மோசமான நீர் மேலாண்மைக்கு உதாரணமாக திகழ்கிறது எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உபரி நீர் எல்லாம் கடலில் கலப்பதற்கு ஆட்சியில் இருக்கும் அதிமுக அரசே முழுப்பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள ஸ்டாலின், ஏரி, குளங்கள், அணைகள் ஆகியவற்றை மறு சீரமைப்பு செய்வதில் படுதோல்வியடைந்து, விவசாயத்திற்கு தேவைப்படும் உபரி நீரை விரையம் செய்து நிற்கும் அதிமுக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.