சென்னை மாநகரில் வசிக்கும் குடிசைப் பகுதி மக்களுக்கு படிப்படியாக மாற்று குடியிருப்புகள் வழங்கப்பட்டு வருவதாக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் பேசிய திமுக உறுப்பினர் சேகர்பாபு, சத்யவாணி முத்துநகரில் உள்ள குடிசைப் பகுதிகள் மற்றும் சாலையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பான குடியிருப்புகள் ஒதுக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் சென்னை மாநகரில் உள்ள குடிசைப் பகுதிகளில் 14ஆயிரத்து 857 குடும்பங்கள் வசித்து வருகின்றன என்று குறிப்பிட்டார்.
இவர்களில், 10ஆயிரத்து 740 குடும்பங்கள் பெரும்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார். சாலையோரம் வசிக்கும் மக்களில் 4 ஆயிரத்து 938 குடும்பங்களுக்கு ஒக்கியம் துரைப்பாக்கம், பெரும்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.