தமிழக ஆளுநர் கையெழுத்திடாமல் மசோதாக்களை எல்லாம் ஊறுகாய் ஜாடியில் ஊற வைத்துக் கொண்டுள்ளார் என திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி விமர்சித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் எதிரே திராவிடர் கழகம் சார்பில், சமூக நீதிப் பாதுகாப்பு திராவிட மாடல் தொடர் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற திராவிட கழக தலைவர் கி.வீரமணி சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசுகையில், அருப்புக்கோட்டை அருகே உள்ள சுக்கிலநத்தம் கிராமத்தில் தான், முதன் முதலில் 1928 ஆம் ஆண்டு சுயமரியாதை திருமணம் நடைபெற்றது. பெரியார் தான் அந்த திருமணத்தை நடத்தி வைத்தார். 1954ஆம் ஆண்டு சுயமரியாதை திருமணத்தை நீதிமன்றம் செல்லாது என அறிவித்தது. என்னுடைய திருமணத்தை 1958 ஆம் ஆண்டு பெரியாரும், மணியம்மையும் சேர்ந்து நடத்தி வைத்தனர். ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணி அளவில் ராகு வேலையில் தான் என் திருமணம் நடந்தது. அதைப் பற்றி எல்லாம் நாங்கள் கவலை கொள்ளவில்லை.
சமூக நீதி, இட ஒதுக்கீடு இல்லை என்றால் நம்பிள்ளைகள் படிக்க முடியாது, அதற்கு தற்போது ஆபத்து வந்துள்ளது. திராவிட மாடல் ஆட்சியின் தொடர்ச்சியாக மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகி, அவரது போராட்டாத்தால் சமூக நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அரசியல் பெயர் தான் பாஜக. பாஜக ஆட்சி சுதந்திர ஆட்சி கிடையாது, ஆர்எஸ்எஸ் உத்தரவை தான் பிஜேபி பின்பன்றுகிறது. கோட்சே பயிற்சி எடுத்த களம் தான் ஆர்எஸ்எஸ். சமூக நீதியில் கை வைக்க கூடிய துணிச்சல் எந்த கட்சிக்கும் கிடையாது.
தேர்தலுக்காக பழங்குடியின மக்களை ஏமாற்றுவதற்கு தான், பழங்குடி இனத்தைச் சேர்ந்தவரை பாஜக குடியரசுத் தலைவராக நியமித்துள்ளது. பெரியார் இல்லை என்றால் முழங்காலுக்கு கீழ் வேஷ்டி அணிய முடியாது. ஆடு மேய்ப்பவர்கள் மாடு மேய்ப்பவர்கள் எல்லாம், ஐஏஎஸ் ஐபிஎஸ் ஆவதற்காக பாடுபட்ட இயக்கம் தான் நம் இயக்கம். அதை ஒழிக்க கூடிய வகையில் பொருளாதார ரீதியில் இட ஒதுக்கீட்டை கொண்டு வந்துள்ளது மத்திய அரசு. ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் என்பது காங்கிரஸின் திட்டம், அதிலும் 33% கட் செய்வோம் என பாஜக கூறியுள்ளது. மாநில உரிமைகள், நிதி உரிமைகள் பறிபோகிறது.
வீடு தேடி கல்வி, வீடு தேடி மருத்துவம் என சாதனைக்கு மேல் சாதனையாக நல்லாட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சியை கவிழ்க்க முடியாது என்பதால் தான், அதை கவிழ்க்க ஆளுநரை வரவழைத்து ஏட்டிக்கு போட்டி செய்கிறார்கள். மசோதாக்களில் கையெழுத்திடாமல் ஊறுகாய் ஜாடியில் மசோதாக்களை ஊற வைத்து கொண்டிருக்கிறார் ஆளுநர். ஆர்எஸ்எஸ்-ன் பிரச்சார கூடமாக ராஜ் பவன் மாறியுள்ளது. ஆன் லைன் சூதாட்டம், பல தற்கொலைகளை உண்டாக்கி உள்ளது. சூதாட்டத்தில் இழக்க இழக்க மேலும் முதலீடு செய்ய ஆசை வரும், அதற்காக ஆன்லைன் சூதாட்டத்தை ஒழிக்க நிறைவேற்றப்பட்ட மசோதாவிலும் ஆளுநர் கையெழுத்திடவில்லை. மக்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும், திராவிட மாடல் ஆட்சிக்கு பல தடைகளை போட்டு வருகின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன் குஜராத் மாடல் என கூறினார்கள், வங்கி கணக்கில் ரூ15 லட்சம் வரவு வைக்கப்படும், லட்சுமி வீட்டில் தாண்டவமாடுவாள் என்றெல்லாம் கூறினார்கள். 2 கோடி பேருக்கு வருடத்திற்கு வேலை வாய்ப்பு கொடுப்போம் என கூறினார்கள், எதையும் செய்யவில்லை. இதை தான் அமித்ஷா ஜும்லா என கூறுகிறார். வறுமையை ஒழித்து வேலைவாய்ப்பை அதிகரிக்க கூடிய, பொருளாதாரத்தை உயர்த்தும் திட்டமாக சேது சமுத்திரத் திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் அதற்கும் முட்டுக்கட்டை போட்டார்கள். சேது சமுத்திரத் திட்டம் மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும் என்று கூறிய அவர், சொன்னதை செய்வது தான் திராவிட மாடல் ஆட்சி என பேசினார்.