"ராஜேந்திர சோழன் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும்" - கங்கை கொண்ட சோழபுரம் மக்கள்

"ராஜேந்திர சோழன் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும்" - கங்கை கொண்ட சோழபுரம் மக்கள்

"ராஜேந்திர சோழன் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும்" - கங்கை கொண்ட சோழபுரம் மக்கள்
Published on

அரியலூர் - கங்கைகொண்ட சோழபுரத்தை தலைநகராக நிர்மானித்து சுமார் 267ஆண்டுகள் தெற்காசியாவை ஒருநாட்டின்கீழ் கட்டியாள வழிவகுத்தவர் சோழ மாமன்னர் ராஜேந்திரசோழன். இவரின் பிறந்தநாளான ஆடி திருவாதிரையை, அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்று கங்கைகொண்ட சோழபுரம் கிராம மக்களும் மற்றும் வரலாற்று ஆராய்ச்சியாளர்களும் கோரிக்கை வைக்கின்றனர்.

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆயிரம் ஆண்டுகளை கடந்தும், வரலாற்று பொக்கிஷமாக, கட்டிடக்கலைக்கு சான்றாக, யுனெஸ்கோவின் புராதான சின்னமாக விளங்கிவருகிறது பெருவுடையார் கோவில். இக்கோவிலை நிர்மானித்த சோழப்பேரரசன் ராஜேந்திரசோழன் தனது தலைநகராக கங்கைகொண்ட சோழபுரத்தை அமைத்து அதன் மையத்தில் இக்கோவிலை கட்டினார்.

தனது படைகளை கங்கைவரை அனுப்பி, அங்கிருந்த மன்னர்களை வென்று, அப்பகுதியிலிருந்து கங்கை நீரை எடுத்து வந்து கங்கைகொண்டசோழபுரம் பெருவுடையாரை அபிஷேகம் செய்து கோயிலுக்கு குடமுழுக்கு நடத்தினார் ராஜேந்திரசோழர் என்பது வரலாறு. தனது ஆட்சிகாலத்தில், கங்கைவரை இந்தியாவின் பகுதிகளையும், கடாரம் ஸ்ரீவிஜயம் உள்ளிட்ட தெற்காசியாவின் பகுதிகளையும் வென்றெடுத்த மாவீரன் என்று போற்றப்படுபவர் ராஜேந்திரசோழன்.

இந்தியத் துணைக் கண்டத்திலேயே மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் மாமன்னர் ராஜேந்திர சோழர் மட்டுமே. தனது ஆயுட்காலத்தில் 65 ஆண்டுகளை போர்க்களத்தில் செலவிட்டவர். 35 நாடுகளை போரில் வெற்றி கண்டவர். அவரது போர்ப்படையில் 60 ஆயிரம் யானைகளும், 5 லட்சம் குதிரைகளும் இருந்ததாக செப்பேடுகள் கூறுகின்றன. ஆறாயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள நாட்டை, பத்தாயிரம் போர் கப்பலுடன் சென்று ராஜேந்திரசோழன் வெற்றி பெற்றார் என்பதும், மிகப்பெரிய கடற்படையை முதன்முதலில் உருவாக்கியவர் ராஜேந்திரசோழன்தான் என்பதும் வரலாற்று ஏடுகளில் உள்ளது.

தற்போதைய இந்தோனேஷியா, மலேசியா, சீனா, கம்போடியா, இலங்கை போன்ற நாடுகளை கப்பல் படையால் வென்றெடுத்த மாவீரன். அதுவும் குறிப்பாக ஸ்ரீவிஜய நாடு பெரும் வணிக நாடாக விளங்கியது. உலகிலுள்ள பல வணிகர்களும் அங்கு வந்து போவது வழக்கம்..

நாட்டின் பொருளாதாரமான வணிகத்தை காப்பாற்றம் மிகச் சிறந்த போர்வீரர்களை துவம்சம் செய்து பல நாட்டு வணிகத்தை கைப்பற்றியவரும்கூட. தமிழக வாணிப செட்டியார்கள், அவர் காலத்தில்தான் உலகம் முழுவதும் பயணம் செய்து பெரும்பணம் ஈட்டினர் என சொல்லப்படுகிறது.

கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டு குழுமத்தலைவர் கோமகன் இதுபற்றி பேசுகையில், “பல பெருமைகளை உடைய ராஜேந்திர சோழனின் பிறந்த நாளை தமிழக அரசு, அரசுவிழாவாக அறிவித்து கொண்டாடவேண்டும். காலத்தால் அழியாத இந்த கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் அந்நிகழ்வை மூன்றுநாள் நிகழ்சிகளாக நடத்தி, அவ்விழாவில் ராஜேந்திரசோழனின் பெருமைகளையும் அவர் காலத்திய வரலாற்று ஆய்வுகளையும் வெளியிட வேண்டும். இதன்மூலம் இனிவரும் காலத்திலும் ராஜேந்திரசோழனின் பெருமை நிலைத்து நிற்கும். மேலும் 267ஆண்டுகளுக்கு தெற்காசியாவை கட்டியாண்ட தமிழர்களின் வரலாறு போற்றி பாதுகாக்கப்படும்” என்று கூறுனார்.

வருகின்ற ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி ஆடிமாத திருவாதிரை வருவதையொட்டி, அன்றைய தினம் அரசு விழாவாக நடத்தப்பட வேண்டும் என்பதையும் கோரிக்கையாக வைத்தார் அவர்.

ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் சார்பாக தஞ்சை மாவட்ட நிர்வாகம் ராஜராஜ சோழனின் பிறந்த நாளான ஜப்பசி மாதம் சதய நட்சத்தினத்தன்று சதயவிழாவாக இரண்டு நாட்கள் அரசு விழா கொண்டாடப்படுகிறது. அதுபோன்று அவரது மகனும் சோழ சாம்ராஜ்யத்தை இந்தியாவை தாண்டி வெளி நாடுகளிலும் கொண்டு சென்ற ராஜேந்திரசோழனின் பிறந்தநாளான ஆடி திருவாதிரையில் அரசுவிழா எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

- வெ.செந்தில்குமார்

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com