இபிஎஸ் மேல் முறையீட்டு வழக்கில் நீதிமன்றத்தில் காரசார வாதம்! நாளை தீர்ப்பு

இபிஎஸ் மேல் முறையீட்டு வழக்கில் நீதிமன்றத்தில் காரசார வாதம்! நாளை தீர்ப்பு
இபிஎஸ் மேல் முறையீட்டு வழக்கில் நீதிமன்றத்தில் காரசார வாதம்! நாளை தீர்ப்பு
Published on

அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது.

அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கு இன்று நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, எடப்பாடி பழனிச்சாமி சார்பில் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் சி.எஸ்.வைத்தியநாதன், ஆரியமா சுந்தரம் மற்றும் விஜய் நாராயண் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அவர்கள் வாதத்தில், தனி நீதிபதியின் தீர்ப்பில் பல்வேறு தவறுகள் இருப்பதாக சுட்டிக்காட்டினர். குறிப்பாக, ஜூலை 11 பொதுக்குழுவுக்கு ஜூலை 1ல் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும், அதிகாரம் பெற்றவர் பொதுக்குழுவை கூட்டவில்லை என்றும் தனி நீதிபதி கூறியுள்ளது தவறு என தெரிவித்தனர்.

மேலும் கட்சியினர் ஒற்றை தலைமை வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாக கூறியதற்கு எந்த புள்ளி விவரங்களும் இல்லை எனவும், ஒன்றரை கோடி உறுப்பினர்களின் எண்ணத்தை 2500 பொதுக்குழு உறுப்பினர்கள் பிரதிபலித்தார்களா என தனி நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளது யூகத்தின் அடிப்படையிலானது எனவும் குறிப்பிட்டனர்.

ஜூன் 23ம் தேதிக்கு முந்தைய நிலை நீடிக்க வேண்டும் என பன்னீர்செல்வம் உள்ளிட்ட மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்படாத நிலையில், அந்த நிவாரணத்தை தனி நீதிபதி வழங்கியது அசாதாரணமானது எனச் சுட்டிக்காட்டினர். கட்சி விவகாரங்களை பொறுத்தவரை பொதுக்குழு முடிவே இறுதியானது. அடிப்படை தொண்டர்களின் கருத்துக்களை பெறவில்லை என்ற தனி நீதிபதி தீர்ப்பளித்தது தவறு எனவும் சுட்டிக்காட்டினர்.

தொடர்ந்து ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து செயல்பட வேண்டும் என தனி நீதிபதி தீர்ப்பளித்ததைச் சுட்டிக்காட்டிய மூத்த வழக்கறிஞர்கள், இருவரும் இணைந்து செயல்பட முன்வர மாட்டார்கள் எனவும், தனி நீதிபதி உத்தரவு காரணமாக கட்சி நடவடிக்கைகள் ஸ்தம்பித்து விட்டதாகவும் தெரிவித்தனர்.

மேலும் தனது உரிமை பாதிக்கப்பட்டதால் தான் பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்திருக்கிறாரே தவிர, 1.50 கோடி உறுப்பினர்களின் உரிமைக்காக அல்ல எனவும் சுட்டிக்காட்டினர். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இல்லாமல் பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை நடத்த கூடாது என்ற தனி நீதிபதி உத்தரவு கட்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளது எனவும், இது விபரீதமானது எனவும் தெரிவித்தனர்.

முடிவில் உள்கட்சி விவகாரத்தில் தலையிடும் வகையிலும், வழக்கு கோரிக்கையை மீறி உள்ளதாலும், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டனர்.

தொடர்ந்து, பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் குரு கிருஷ்ணகுமார் மற்றும் அரவிந்த் பாண்டியன், அடிப்படை உறுப்பினர்களை விட பொதுக்குழு உறுப்பினர்களே மேலானவர்கள் என்ற எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வாதத்தை ஏற்க முடியாது என்றும், அடிப்படை உறுப்பினர்களால் பொதுச் செயலாளரை தேர்வு செய்யும் ஒரே கட்சி அதிமுக தான் எனவும், இது சம்பந்தமான விதியை கொண்டு வருவதில் எம்.ஜி.ஆர். உறுதியாக இருந்ததாகவும் தெரிவித்தனர்.

ஜூன் 23ல் நடந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. அதனால் இரு பதவிகளும் காலியாகவில்லை என முடிவுக்கு வந்து இரு பதவிகளும் நீடிப்பதாக கருதும் வகையில் ஜூன் 23க்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும் என தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவித்தனர்.

மேலும், தலைமைக்கழகத்தின் பெயரில் தான் பொதுக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதே தவிர, ஒருங்கிணைப்பாளரோ அல்லது இணை ஒருங்கிணைப்பாளரோ அல்ல எனவும், கட்சி விதிகளின்படி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே பொதுக்குழுவை கூட்ட முடியும் என்பதால் ஜூலை 11 கூட்டத்துக்கு அனுப்பிய நோட்டீஸ் செல்லாது எனவும் வாதிட்டனர். சஸ்பெண்ட் உள்ளிட்ட நடவடிக்கைகளால் தகுதி நீக்கம் ஆகியிருந்தால் மட்டுமே பதவிகள் காலியானதாக கூறலாம் என்று தெரிவித்த ஓ.பி.எஸ் தரப்பு, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரை அடிப்படை உறுப்பினர்கள் தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்றும், பொதுக்குழுவில் ஒப்புதல் பெறாவிட்டால் பதவிகள் காலியாகி விடும் என கட்சி விதிகளில் கூறப்படவில்லை என்றும் வாதிடப்பட்டது.

ஓ.பி.எஸ். தரப்பு வாதங்கள் நிறைவடைந்ததை அடுத்து, பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் ஆஜராகி, அடிப்படை உறுப்பினர்கள் மூலம் தேர்தல் நடத்துவது என செயற்குழுவில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றிய பின் பொதுக்குழு ஒப்புதல் வழங்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்தார்.

பின்னர், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் நாளைக்குள் எழுத்து பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தள்ளிவைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு மீண்டும் நாளை சென்னை உயர் நீதிமன்றத்தில் வர உள்ள நிலையில், நாளை தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com