சென்னை, கோவையில் கொடி கட்டி பறக்கும் “ஆன்லைன் லாட்டரி”! கள ஆய்வில் அதிர்ச்சி பின்னணி!

சென்னை, கோவையில் கொடி கட்டி பறக்கும் “ஆன்லைன் லாட்டரி”! கள ஆய்வில் அதிர்ச்சி பின்னணி!
சென்னை, கோவையில் கொடி கட்டி பறக்கும் “ஆன்லைன் லாட்டரி”! கள ஆய்வில் அதிர்ச்சி பின்னணி!
Published on

தமிழ்நாட்டில் லாட்டரி டிக்கெட் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், பல்வேறு குறுக்கு வழிகளில் அதன் விற்பனை நடந்து வருகிறது. அதில் சமூகவலைதளங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. கோவையில் வாட்ஸ் ஆப், டெலிகிராம், பேஸ்புக் என செய்தி பரிமாற்ற செயலிகள் மூலம் கேரளா லாட்டரிகள் விற்பனை செய்யப்படுகின்றன. அதாவது சமூக வலைதளங்களில் அனுப்பப்படும் லாட்டரியின் புகைப்படங்களை தேர்வு செய்து, அதற்கு ஏற்ற பணத்தை ஆன்லைன் மூலம் வாடிக்கையாளர்கள் அனுப்புகின்றனர்.

மதியம் 3 மணிக்கு குலுக்கல் நடைபெறும் நிலையில், வெற்றி பெற்றவர்களுக்கு ஆன்லைன் மூலம் பணம் அனுப்பப்படுகிறதாம். லாட்டரி விற்பனை என்னும் சூதாட்டத்தில் பணத்தை இழப்பது ஒருபுறம் இருப்பினும், அதிக பரிசுத்தொகை கிடைத்தால், அதை சுருட்டிக்கொண்டு ஏமாற்றும் நடைமுறையும் உள்ளது. தமிழ்நாடு அரசு இதை கவனத்தில் கொண்டு, ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை நடைபெறுவதை தடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

தலைநகர் சென்னையிலும் 3 நம்பர், 4 நம்பர் லாட்டரி விற்பனை நடப்பது குறித்து ஏற்கனவே புதிய தலைமுறை பிரத்யேக கள ஆய்வு மேற்கொண்டிருந்தது. அதனை தற்போது மீண்டுமொருமுறை பார்க்கலாம்

லாட்டரி சீட்டு விற்பனைக்கென தனியாக இடம் எதுவும் இல்லை. சாலையோரம், நடைபாதை என எந்த இடத்திலும் நடைபெறுகிறது. வெள்ளைத்தாளும், பேனாவும் முதலீடாகக் கொண்டு நம்பர் லாட்டரி விற்பனை களைகட்டுகிறது. பூடான் லாட்டரி 3 எண்களிலும், கேரளா லாட்டரி 3 மற்றும் 4 எண்களிலும் விற்கப்படுகின்றன. பூடான் லாட்டரியின் விலை 70 ரூபாய். கேரளா லாட்டரி 3 எண்கள் கொண்டவை 80 ரூபாய்க்கும், 4 எண்கள் கொண்டவை 110 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன. லாட்டரிகளில் பரிசு விழுந்தால் குறைந்தபட்சம100 ரூபாய் தொடங்கி அதிகபட்சம்4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

வாட்ஸ்அப் மூலமும் லாட்டரி விற்பனை நடைபெறுகிறது. நேரில் சென்று வாங்க முடியாதவர்கள் கூகுள் பே மூலம் அனுப்பி நம்பரை உறுதி செய்து கொள்கின்றனர். பரிசு தொகை விழுந்தால் அன்று மாலை அல்லது மறுநாள் காலை பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. சென்னையில் மட்டும் 300க்கும் அதிக குழுக்கள் செயல்படுவதாக அதிகாரபூர்வமற்ற ஒரு தகவல் தெரிவிக்கிறது. ஒரு குழுவில் சுமார் 100 பேர் என வைத்துக்கொண்டாலே சுமார் 30 ஆயிரம் பேர்வரை லாட்டரி விற்பனையில் ஈடுபடுகிறார்கள். இதில் கோடிக்கணக்கில் பணம் புரள்கிறது.

சட்டவிரோத லாட்டரியை வாங்கி பணத்தை இழப்பது பெரும்பாலும் சாதாரண கூலித்தொழிலாளர்களாகவே இருக்கிறார்கள். ஏதோ ஒரு அதிர்ஷ்டம் வரும் என்று நம்பி லாட்டரி வாங்கி ஏமாறும் இவர்களை காக்க அதிரடிம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகியிருக்கிறது. சென்னையில் புதிய தலைமுறை நடத்திய கள ஆய்வை தொடர்ந்து அதிரடி சோதனை நடத்திய காவல்துறையினர், உடனடியாக 18 பேரை கைது செய்து ஆயிரக்கணக்கான ரூபாயை பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com