கடலூர் மாவட்ட மக்கள், புயல் தொடர்பாக அனைத்து வித உதவிகளுக்கும் எந்நேரமும் என்னை தொடர்பு கொள்ளலாம் என தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.
வரும் 15 ஆம் தேதி கடலூர்-பாம்பன் இடையே ‘கஜா’ புயல் கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடல் அலை ஒரு மீட்டர் அளவுக்கு உயரக்கூடும் என்பதால் நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், காரைக்கால், கடலூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கரையோர பகுதிகளில் தண்ணீர் புகும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘கஜா’ புயல் கரையை கடக்கும்போது கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னைக்கு கிழக்கே 600கி.மீ. தூரத்திலும், நாகைக்கு வடகிழக்கே 760 கி.மீ தொலைவில் ‘கஜா’ புயல் மையம் கொண்டுள்ளதாகவும் 10 கி.மீ வேகத்தில் நகர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ‘கஜா’ புயல் நாளை மறுதினம் கடலூர் மற்றும் பாம்பன் இடையே கரையை கடக்க உள்ளதையடுத்து, அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு மீட்பு படைகள் தயார் நிலையில் உள்ளதாக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.
மேலும், கடலூரில் புயல் கடக்கும் சமயத்தில், வாகன ஓட்டிகள் முடிந்த அளவு வாகனங்கள் இயக்குவதை தவிர்த்தும், பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்த்து இல்லங்களிலோ அல்லது பாதுகாப்பான இடங்களிலோ தங்கியும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
கடலூர் மாவட்ட மக்கள், புயல் தொடர்பாக அனைத்து வித உதவிகளுக்கும் எந்நேரமும் என்னை தொடர்பு கொள்ளலாம் எனவும் முன்னெச்சரிக்கையோடு நாம் அனைவரும் ஒன்றிணைந்து புயலை பாதுகாப்பாக எதிர்கொள்வோம் எனவும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.