பிறந்த நாளை கொண்டாடும் விருப்பமில்லை எனவும், அதற்கு ஏழைகளுக்கு நலத்திட்டங்களை வழங்குங்கள் என திமுக தொண்டர்களுக்கு அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிறந்த நாளை கொண்டாடும் திட்டமில்லை என ஏற்கனவே செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தேன். மார்ச் 1ஆம் நாள் என்னுடைய பிறந்தநாள் என்றபோதும், தலைவர் கலைஞர் நம்முடன் இல்லாத நிலையில், பிறந்தநாளைக் கொண்டாடுவதில்லை என்பதே இப்போது என் எண்ணம். ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் முதல் நிகழ்வாக, தலைவரும் தந்தையுமான கலைஞரிடம் வாழ்த்துப் பெறுவது வழக்கம். இந்த ஆண்டு தலைவர் கலைஞரிடம் நேரில் பெற முடியாதபடி, இயற்கையின் சதி அமைந்துவிட்டது.
எனவே பிறந்தநாள் நிகழ்வுகள் அவசியமற்றவை என்பதே என் முடிவு. கட்சியினர் பிறந்த நாள் விழா எனும் பெயரில் ஆடம்பர விழாக்களை நடத்துவதை கைவிட்டு, ஏழை - எளிய மக்கள் பயன்பெறும் வகையிலான நலத்திட்ட உதவிகளை இயன்றவரை வழங்கிட வேண்டுகிறேன். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு - புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெறும் வகையில், களப்பணியாற்றுவதே கழக உடன்பிறப்புகள் எனக்கு பிறந்தநாளில் அளித்திடும் உயர்வான பரிசாகும். “நாற்பதுக்கு நாற்பது” என்ற வெற்றிக்கனியை, தலைவர் கலைஞருக்கு காணிக்கையாக்குவோம்!” எனத் தெரிவித்துள்ளார்.