சுகாதார அவசர நிலையை சமாளிக்கத் தேவையான மருத்துவர்களையும், பணியாளர்களையும் நியமிப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ஜே.ராதாகிருஷ்ணனுக்கு, விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் கடிதம் எழுதியுள்ளார்.
இந்தியாவில் அதிகம் காணப்படுவது இருமுறை உருமாற்றம் அடைந்த B.1.617 என்ற வகை கொரோனா வைரஸ் என்பது புள்ளி விவரங்களின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து உலக அளவில் வைரஸ்களை ஆராயும் GISAID நிறுவனத்துக்கு கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி அனுப்பப்பட்ட வைரஸ் மாதிரிகளில் 80 சதவிகிதம், இந்த வகை வைரஸ் என்பது தெரியவந்துள்ளது. லண்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள கிளினிக்கல் ஆப்ரேஷனல் ரிசர்ச் யூனிட்டின் இயக்குனர் பேராசிரியர் கிறிஸ்டினா பேகல், 'B.1.617 வகை வைரஸ் தான் மிக வேகமாக வளர்கிறது' என்பதைக் கண்டறிந்து குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்திலும் குஜராத்திலும் கண்டறியப்பட்ட கொரோனா நோயாளிகளில் 60 முதல் 80 சதவிகிதம் பேர், இந்த வைரஸின் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர் எனத் தெரிய வந்துள்ளது. ஆகவே, தமிழ்நாட்டில் இந்த வகை வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் எவ்வளவு பேர்? இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு அரசு எடுத்துள்ள சிறப்பு நடவடிக்கைகள் என்ன? என்பதை வெளியிடுமாறு தனது கடிதத்தில் எம்.பி.ரவிகுமார் கேட்டுக்கொண்டுள்ளார்.