தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில், பேருந்து பயணச்சீட்டுக் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்றும் அவ்வாறு பரவும் தகவல்கள் முழுக்க வதந்தியே என்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகக் பேருந்துகளில், பேருந்து பயணச்சீட்டுக் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் பரவிய நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் “தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் கட்டண உயர்வு குறித்து தொடர்ந்து வதந்திகள் உலவி வருகின்றன. கட்டண உயர்வு குறித்து அட்டவணை தயாராகி விட்டதாக செய்திகள் பரப்பப்படுகின்றன. அது குறித்து இன்று என்னிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அவ்வாறு அட்டவணை ஏதும் தயாராகவில்லை என்பதனைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இரு மாநிலங்களுக்கிடையே பேருந்து போக்குவரத்துக்கான ஒப்பந்தம் ஏற்படுத்தும்போது, ஒரு மாநிலத்தில் கட்டணம் உயர்த்தப்பட்டால், அந்த மாநிலத்தில் நுழையும் மற்றொரு மாநில பேருந்துகளின் கட்டணம் உயர்த்த வேண்டும் என்பது ஒப்பந்த விதி. அவ்வாறு தான் பர்மிட் வழங்கப்படும். கேரளா மற்றும் ஆந்திர மாநிலங்களில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்ட சூழலில், அந்த மாநிலங்களுக்குள் செல்லும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் அந்த மாநிலத்தில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் வசூலிக்கப்படும்.
இந்த அட்டவணையை தவறாக புரிந்துகொண்டு, "தமிழ்நாட்டில் இயங்கும் அனைத்துப் பேருந்துகளுக்கும் கட்டணம் உயர்த்த அட்டவணை தயாராகி விட்டது" என்ற தவறான செய்தி பரப்பப்படுகிறது. கடந்த அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் நிதி சூறையாடப்பட்டு, போக்குவரத்து கழகங்கள் நிதி நெருக்கடியில் இருந்தாலும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் அரசு போக்குவரத்து கழகங்கள் செயல்பட வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளார்கள்.
மேலும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சாதாரண கட்டணப் நகரப் பேருந்துகுளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற மகத்தான திட்டத்தை வழங்கி, அது சிறப்புற செயல்படுத்தப்படுகிறதா என்று தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். இன்று வரை கடந்த ஓராண்டில், 112 கோடி பெண்கள் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்துள்ளனர். அதற்கான நிதியை முதலமைச்சர் வழங்கி வருகிறார்.
இதுபோன்று, ஏழை, எளிய மக்களுக்கு பாதிக்காத வண்ணம் கட்டண உயர்வில்லாமல் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் இயங்கி வரும் சூழலில், "கட்டண உயர்வு அட்டவணை தயாராகி விட்டது" என்ற தவறான செய்தியை பரப்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.” என்று அவர் கூறியுள்ளார்.