டெல்லி விமான நிலையத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு இந்தி தெரியாததால் அதிகாரிகள் தன்னை அவமானப்படுத்தியதை நினைவுகூர்ந்துள்ளார் இயக்குநர் வெற்றிமாறன்.
அண்மையில் ஆனந்த விகடன் இதழுக்கு அளித்த பேட்டியில், கனிமொழி எம்பிக்கு விமான நிலையத்தில் நடந்த அவமதிப்பைச் சுட்டிக்காட்டி, தனக்கும் அதேபோல ஒரு சம்பவம் நடந்திருப்பதாக இயக்குநர் வெற்றிமாறன் நினைவுகூர்ந்துள்ளார். "என் தாய்மொழியை நான் பேசுறது எப்படி நாட்டோட ஒருமைப்பாட்டைச் சீர்குலைக்கும்? " என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அந்தப் பேட்டியில், "2011 ஆகஸ்ட்ல ‘ஆடுகளம்’ படத்தை கனடா, மான்ட்ரியால் பிலிம் பெஸ்டிவலில் ஸ்கிரீன் பண்ணிட்டு இந்தியாவுக்குத் திரும்ப வர்றோம். டெல்லி ஏர்போர்ட் இமிகிரேஷன்ல இருந்தவர் என்கிட்ட இந்தில பேசினார். ‘ஸாரி... எனக்கு இந்தி தெரியாது’ன்னு ஆங்கிலத்தில் சொன்னேன். ‘கியா... கியா... யு டோன்ட் நோ மதர் டங் ஆஃப் திஸ் கன்ட்ரி?’ன்னு கேட்டார்.
நான் ‘என் அம்மா பேசுற மொழி தமிழ். அதுதான் என்னோட தாய்மொழி. மத்தவங்களோட பேச எனக்கு ஆங்கிலம் தெரியும்’னு சொன்னேன். ரொம்பக் கோபமாகி, ‘நீங்களாம் இப்படித்தான்... யு தமிழன்ஸ், காஷ்மீரீஸ் ஆர் ஓன்லி பிரேக்கிங் திஸ் கன்ட்ரி... நீங்களாம் தீவிரவாதிங்க’ன்னு என்னவெல்லாமோ பேசி என்னைத் தனியா நிக்க வெச்சிட்டார்.
‘நாங்க கல்ச்சுரல் எக்ஸ்சேஞ்சுக்காக கனடா போயிட்டு வர்றேன்... இந்த வருஷம் இவர் நேஷனல் அவார்டு வாங்கியிருக்கார்’னெல்லாம் என்னுடன் வந்த தயாரிப்பாளர் கதிரேசனும், ஜி.வி.பிரகாஷும் சொல்லியும் அவர் கேட்கவேயில்லை. 45 நிமிஷம் என்னைத் தனியா நிக்கவெச்சிட்டு அப்புறம் வேறு ஒரு அதிகாரி வந்துதான் என்னை அனுப்பினாங்க.
என் தாய்மொழியை நான் பேசுறது எப்படி நாட்டோட ஒருமைப்பாட்டைச் சீர்குலைக்கும்? என் தாய்மொழியில் நான் படிப்பது எப்படி நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும். The more i can retain my Identity, the more i can survive. நாம வாழணும்னா நம்மோட பண்பாட்டை நாம காப்பாத்தணும். அதுக்காக மற்ற பண்பாட்டுக்கோ, மொழிக்கோ எதிராகச் செயல்படுவது நம்முடைய வேலையோ, நோக்கமோ கிடையாது!’’என்று வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
courtesy - Ananda vikatan