”பணம் வேண்டாம்; படகுதான் வேண்டும்” - நாகை மீனவர்கள் கோரிக்கை

”பணம் வேண்டாம்; படகுதான் வேண்டும்” - நாகை மீனவர்கள் கோரிக்கை
”பணம் வேண்டாம்; படகுதான் வேண்டும்” - நாகை மீனவர்கள் கோரிக்கை
Published on

எங்களுக்கு பணம் வேண்டாம், படகுதான் வேண்டும் என நாகை மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

‘கஜா’ புயல் கடந்த 15ஆம் தேதி இரவு நாகை - வேதாரண்யம் இடையே கரையைக் கடந்தது. இதில் நாகை, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சை, கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் கடும் சேதத்திற்கு உள்ளாகின. ஏராளமான பயிர்களும், வீடுகளும், பொருட்களும்  சேதம் அடைந்தன. 

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஆனால் அரசு தரப்பில் இருந்து பெரும்பாலும் நிவாரணம் ஏதும் கிடைக்கவில்லை என பல்வேறு தரப்பினர் குற்றச்சாட்டை முன் வைத்து வருகின்றனர்.

இதனிடையே கஜா புயலால் பாதிக்கப்பட்ட பல்வேறு மக்களுக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நிவாரண நிதி ஒதுக்கி அறிவிப்பு வெளியிட்டார். அதில், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணமாக முழுவதும் சேதமடைந்த வலைகளுடன் கூடிய கட்டுமரங்களுக்கு 42 ஆயிரம் ரூபாயும் பகுதி சேதமடைந்த வலைகளுடன் கூடிய கட்டுமரங்களுக்கு 20 ஆயிரம் ரூபாயும், முழுவதும் சேதமடைந்த பைபர் படகுகள் மற்றும் வலைகளுக்கு 85 ஆயிரம் ரூபாயும், பகுதி சேதமடைந்த பைபர் படகுகள் மற்றும் வலைகளுக்கு 30 ஆயிரம் ரூபாயும் முழுவதும் சேதமடந்த விசைப்படகுகளுக்கு 5 லட்சம் ரூபாயும், பகுதி சேதமடந்த விசைப்படகுகளுக்கு 3 லட்சம் ரூபாயும் வலைகள் மட்டுமே சேதமடைந்திருந்தால் 10 ஆயிரம் ரூபாயும் எஞ்சின் பழுது நீக்கம் செய்ய 5 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இதனிடையே கஜா புயலால் நாகப்பட்டினம் விழுந்தமாவடி கிராமம் முற்றிலும் சேதமானது. அப்பகுதியில் உள்ள 130 குடும்பங்களும் தனது வீடுகளையும் படகுகளையும் இழந்துள்ளனர்.   இந்நிலையில், எங்களுக்கு பணம் வேண்டாம், படகுதான் வேண்டும் என நாகை மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதுகுறித்து மீனவர் வீரன் கூறுகையில், “நான் 2004 ஆம் ஆண்டு சுனாமியை சந்தித்த போது எனது இரண்டு பிள்ளைகளை இழந்தேன். ஒரே ஒரு பத்துமாத கைக்குழந்தை மட்டும் தப்பியது. இப்போது அவள் பத்தாம் வகுப்பு படித்து வருகிறாள். அவளின் புத்தகங்கள் எல்லாம் மழையில் நனைந்து வீணானது. நான் எனது குடும்பத்தை இழந்துவிட்டேன். இனி என்னிடம் இழக்க ஒன்றுமில்லை” என தெரிவித்தார். 

இதுகுறித்து மீனவர் சங்க தலைவர் முத்தையன் கூறுகையில், “2004ல் வந்த சுனாமியை விட நவம்பர் 16 ஆம் தேதி அதிகாலையில் மிக மோசமான அசம்பாவிதத்தை சந்தித்தோம் என தெரிவித்தார். 

2004 ஆம் ஆண்டு வந்த சுனாமியை நாங்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை எனவும் அதனால் பல உயிர்களையும் உடைமைகளையும் இழந்தோம் எனவும் தெரிவித்தார். ஆனால் தற்போது புயல் வருவது குறித்து அறிந்தும் எங்களால் பேரழிவில் இருந்து பாதுகாத்து கொள்ள முடியவில்லை எனவும் தெரிவித்தார். 

மேலும் அரசு பாதிக்கப்பட்ட விசைப்படகுகளுக்கு ரூ.85 ஆயிரம் வழங்குவதாக உத்தரவிட்டுள்ளதாகவும் ஒரு படகின் விலை ரூ.2 லட்சம் அல்லது ரூ. 3 லட்சம் இருக்கும்போது அரசு அறிவித்த பணம் எவ்வாறு பயன்படும் என கேள்வி எழுப்பியுள்ளார். 

ஒரு வலையை செய்ய வேண்டுமானால் 50 பேர் சேர்ந்து 30 நாட்கள் அதை தயார் செய்ய வேண்டும் எனவும் எங்களுக்கு பணம் வேண்டாம் படகு தான் வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.   

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com