புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதைத் தொடர்ந்து நாடு முழுவதும் கல்வியாளர்கள் மத்தியில் அது விவாதப் பொருளாக மாறியுள்ளது. குறிப்பாக மும்மொழிக் கல்வி தமிழகத்தில் பெரும் எதிர்ப்பலைகளை உருவாக்கியுள்ள நிலையில், தேசிய கல்விக் கொள்கையைப் பற்றிய கேள்விகளுக்கு பொதுப்பள்ளிகளுக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு விரிவான பதிலளித்தார்.
தேசிய கல்விக்கொள்கையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள். அதில் நீங்கள் பாராட்டக்கூடிய அம்சங்கள் என்ன?
தேசியக் கல்விக்கொள்கை 2020 இந்திய அரசமைப்புச் சட்டத்தையும் இந்திய மக்களுடைய உண்மையான சிக்கல்களையும், தேவைகளையும் உணராமல் உருவாக்கப்பட்டது. இந்தியாவில் கடந்த 70 ஆண்டுகளாக பல்வேறு மாநிலங்களில் அந்தந்த மாநில மக்களுடைய தேவைகள், சிக்கல்கள், வசதிகள் ஆகியவற்றைப் பொறுத்து அந்தந்த மாநிலங்களில் கல்வி வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இந்திய நாட்டில் ஒரே மாதிரியான இயற்கை வளங்கள் கிடையாது. உதாரணத்திற்கு பீகார், ஜார்க்கண்ட் என இரு மாநிலங்களாக உருவாகியுள்ளன. ஒன்றுபட்ட பீகாராக இருக்கும்போது, ஜார்க்கண்ட் பகுதியில்தான் கனிமவளங்கள் உள்பட எல்லா வளங்களும் இருந்தன. பீகாரில் எதுவுமே இல்லை. அனைத்து வளங்களுடன் ஜார்க்கண்ட் ஒரு மாநிலமாக உருவாகிவிட்டது. அத்தனை இயற்கை வளங்களும் இருந்தால்கூட பீகார் கல்வியில் பெரிய முன்னேற்றத்தை அடையவில்லை. உத்தரப்பிரதேசமாகட்டும், மத்தியப் பிரதேசமாகட்டும் அந்தச் சிக்கல்கள் நீடிக்கின்றன.
தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் ஒரு மிகப்பெரிய சமூக சீர்திருத்த இயக்கங்கள் தோன்றின. கேரளத்தில் அய்யங்காளி, நாராயணகுரு, அதுபோல தமிழகத்தில் வைகுண்டசாமி, இராமலிங்க அடிகளார், அயோத்திதாச பண்டிதரில் இருந்து தந்தை பெரியார் வரைக்கும் இவர்களுடைய இயக்கம் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது. அதேபோல மகாராஷ்டிராவில் ஜோதிராவ் பூலே, சாவித்திரிபாய் பூலே, டாக்டர் அம்பேத்கர் போன்றவர்களால் கல்வி வளர்ச்சி பெற்றது.
குறிப்பாக தமிழ்நாட்டில், இந்தியாவிலேயே மூன்று கிலோ மீட்டருக்கு ஒரு தொடக்கப்பள்ளி, ஐந்து கிலோ மீட்டருக்கு ஓர் உயர்நிலைப்பள்ளி இருக்கிறது. பல்வேறு கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளன. எனவே, இந்தியாவில் சமச்சீரான கல்வி வளர்ச்சி இல்லை. 1968ல் ஒரு கல்விக்கொள்கையை அறிவித்தார்கள். மாநிலங்கள் அவற்றை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்ற உரிமையைக் கொடுத்திருந்தார்கள்.
10 + 2 என்பது 68ல் சொல்லியிருந்தாலும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 78ல்தான் வந்தது. இந்த மாதிரி தேசிய அளவிலான கொள்கை என்பது மாநிலங்களுக்கு உரிமை கொடுத்து, மாநிலங்களுக்கு வழிகாட்டுதலை வழங்குகிற அளவுக்குத்தான் இருக்கவேண்டும். அது விரிந்த வடிவமாக இருக்கலாம். ஆனால் இறுக்கமானதாக இருக்கமுடியாது. அதிகாரங்கள் மத்திய அரசிடம் பொறுப்புகள் மட்டும் மாநில அரசிடம் இருப்பது மாதிரியான, மாநிலங்களின் உரிமையை இந்தக் கல்விக்கொள்கை மொத்தமாகப் பறித்திருக்கிறது.
மாணவர்கள் எதைக் கற்க வேண்டுமோ அதைக் கற்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அனைவருக்கும் கல்வி கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளாரே?
இன்றைய தேதியில் மாணவர்கள் கற்கவேண்டும் என்று சொன்னால், அவர்களுக்கு அவசியமான தேவை பாடவாரியான ஆசிரியர்கள். சில மாநிலங்களில் பள்ளிக்கூடங்கள் நிறைய உண்டு. சில மாநிலங்களில் குறைவாக இருக்கலாம். சில மாநிலங்களில் பிஎட் படித்த ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. உதாரணத்திற்கு தமிழ்நாடு. மற்ற சில மாநிலங்களில் சில பாடங்களுக்கு பிஎட் படித்த தகுதியான ஆசிரியர்களே கிடையாது. எங்கே ஆசிரியர்கள் வேண்டுமோ, அந்த மாநிலங்களுக்கு ஆசிரியர்களைக் கொடுங்கள். எங்கு பள்ளிகள் இல்லையோ, அங்கு பள்ளிகளைக் கட்டிக்கொடுங்கள்.
ஒரு பள்ளியில் என்னென்ன வசதிகள் இருக்கவேண்டும் என்று சொல்கிறீர்களோ, அதை அனைத்துப் பள்ளிகளுக்கும் ஏற்படுத்துங்கள். இதுதான் கற்றல் வாய்ப்பை உத்தரவாதப்படுத்துவது. இதுதான் சமமான கற்றல் வாய்ப்பை அனைவருக்கும் கொடுப்பது. மாற்றாக, பள்ளிக்கல்வியில் பள்ளிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்குத்தான் நிறைய சொல்லியுள்ளனர்.
தனியார் பள்ளிகள் தங்கள் இஷ்டம்போல் செயல்படுவதற்கு எல்லா வசதிகளையும் செய்துகொடுத்திருக்கிறார்கள். அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால், எல்லா ஆசிரியர்களையும் கொடுக்கமுடியாது. அதனால் சில பள்ளிகளைச் சேர்த்து ஒரு வளாகத்தை உருவாக்கி, அங்குள்ள வளங்களை எல்லா பள்ளிகளுக்கும் ஷேர் செய்யுங்கள் என்கிறார்கள். இது நடைமுறை சாத்தியம் அல்ல.
ஒரு குழந்தை பள்ளியில் படிக்கும். இன்னொரு குழந்தை பள்ளிக்கு வரமுடியவில்லை என்றாலும் தொலைதூரக் கல்வியில் படிக்கும். இது எப்படி ஒரு சமமான கற்றல் வாய்ப்பாக இருக்கமுடியும். எனவே இவர்கள் என்ன நோக்கத்தைச் சொல்லியிருக்கிறார்களோ, அதனை நிறைவேற்றக்கூடிய கூறுகள் அதில் இல்லை. ஒரு சமமற்ற கற்றல் வாய்ப்பையும், இன்றைக்குள்ள ஏற்றத்தாழ்வுகளையும் நீடிக்கச் செய்யத்தான் இந்தக் கல்விக்கொள்கை பயன்படும்.
எந்தப் புதுமையும் இல்லை. அறிவுசார் சமூகத்தை அல்லாமல் கூலிகளை உண்டாக்கத்தான் இந்தக் கல்விக்கொள்கை பயன்படும் என்று கல்வியாளர், பேராசிரியர் அனில் சடகோபால் முன்வைத்துள்ள கருத்து பற்றி…
ஒரு சமூகம் அறிவுசார் சமூகமாக வளரவேண்டும் என்றால், சுயமான சிந்தனை வேண்டும். ஒரு குழந்தை சுமையின்றி படிக்கிற சூழலை உருவாக்கவேண்டும். பிறந்தது முதல் தாயிடம் வளர்கிற அந்தக் குழந்தை, 3 முதல் 5 வயது வரைக்கும் எந்த சட்டதிட்டங்களுக்கும் உட்படாமல், விளையாட்டுப் போக்கில் கற்றுக்கொள்கிறது. பிறகுதான் முழுமையான கல்வியை கற்கிற மனநிலைக்கு வரும். நாம் செய்யவேண்டிய கற்றல் செயல்பாடு… விளையாட்டு, இசை, நாடகம், ஓவியம் இத்தனையும் அறிமுகப்படுத்தலாம்.
எட்டாம் வகுப்பிலேயே. ஒரு குழந்தைக்கு தொழிலில் ஆர்வத்தை ஏற்படுத்தினால், இந்திய சமூகச் சூழலில் ஒடுக்குமுறை, பொருளாதார ஏற்றத்தாழ்வு அத்தனையும் அந்தக் குழந்தையை எந்த நிலையிலும் பள்ளிக்கல்வி முறையை விட்டு வெளியேறச் செய்யும். கல்வியிலும் தொழிலிலும் குழந்தைகள் சிறந்து விளங்குவது ரொம்பவும் சுமை. 14 வயதுள்ள ஒரு குழந்தை தொழிலில் ஆர்வம் பெறவேண்டிய அவசியம் ஏன் ஏற்படுகிறது?
பேராசிரியர் அனில் சடகோபால் சொல்வதுபோல, இது அறிவுசார் சமூகத்தை உருவாக்குவதல்ல. மிகக்குறைந்த கூலிகளை, அரைகுறை திறன்கொண்ட தொழிலாளிகளை உருவாக்கக்கூடிய ஒரு கல்வித்திட்டம்.
புதிய கல்விக்கொள்கையில் சமமான கற்றல் வாய்ப்புகள் இல்லை என முற்றிலுமாக மறுக்கமுடியுமா?
நிச்சயமாக மறுக்கமுடியும். ஏனென்றால், தொடக்கக்கல்வியில் இருந்தே அவரவர் வசதிகளுக்கேற்ப யார் வேண்டுமானாலும் பள்ளிகளை நடத்திக்கொள்ளலாம். வசதிக்குத் தகுந்தாற்போல கட்டணத்தை வசூல் செய்துகொள்ளலாம். பெற்றோர்கள் திறனுக்கேற்ப எந்தப் பள்ளியிலும் குழந்தைகளைச் சேர்த்துக்கொள்ளலாம்.
மூன்றாம் வகுப்பு முடிக்கும்போது நாங்கள் ஒரு திறனறித் தேர்வு நடத்துவோம். அதில் எத்தனை குழந்தைகளுக்குத் திறன் இருக்கிறது என்பது தெரியவரும். அரசுப் பள்ளியாக இருந்தால், திறன்கள் இருக்கிற பள்ளிகளுக்கு அரசு ஊக்கம் கொடுக்கும். திறனற்ற பள்ளிகளில் ஏன் இல்லை என ஆசிரியர்கள்மீது பழி போடப்படும். பொதுப்பள்ளி முறைமையில் அருகமைப்பள்ளிகள் அமைப்பதுதான் சமமான கற்றல் வாய்ப்பை ஏற்படுத்தும்.
ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பிற்குள் ஏதாவது ஒரு தொழில் கல்வியை கற்றுக்கொள்ளவேண்டும் என்ற விதிமுறை எதார்த்தமானதா?
இது எதார்த்தமானதல்ல. இதுதான் பிள்ளைகளை அடுத்த நிலைக்குப் போகவிடாமல் தடுக்கக்கூடியது. 11 வயதில் இருந்து 13 வயது வரைக்கும் ஏன் ஒரு குழந்தை தொழிலைக் கற்றுத்தேறவேண்டும். எங்க அப்பா தச்சர். எங்க அம்மா கழனியில் வேலை செய்கிறார். அவங்க என்ன எதிர்பார்ப்பாங்க, ஜென்மத்துக்கும் என் பிள்ளை தச்சராக வரக்கூடாது என்றுதானே. என்னை ஏன் மீண்டும் கூலித்தொழிலாளி ஆக்குகிறீர்கள்.
ஐம்பது சதவிகித மாணவர்களாவது தொழில் கல்வியைக் கற்றுக்கொள்ளவேண்டும் என்கிறார்கள். மீதி 50 சதவீதம் யார்? ஒரு சாராருக்கு இஸ்ரோவைக் காட்டுவீர்கள். இன்னொரு சாராருக்கு உள்ளூரில் உள்ள தொழிலைக் காட்டுவீர்களா. எனவே தொழில் கல்வி என்பது மீண்டும் அந்தக் குழந்தைகளை உயர்பொறுப்புக்கு வரும் ஆசையே படாதே என்று சொல்வதற்கு உதவுமே தவிர, நிச்சயம் அது அவர்களை வளர்க்காது.
பள்ளிக்கல்வியின் அனைத்து மட்டத்திலும் உலகளாவிய அணுகுமுறை உறுதிசெய்யப்படும் என்பது நம்மூர் அரசுப் பள்ளிகளை எட்டுமா?
உலகளாவிய என்றால் என்ன என்பதை அவர்கள்தான் விளக்கவேண்டும். பின்லாந்தில் 9 ஆண்டுக்காலம் அடிப்படைக்கல்வி வழங்கப்படுகிறது. அங்கு படிக்கும் குழந்தைகள் தனியார் பள்ளியில் படித்தாலும் கட்டணம் இல்லாமல் படிக்கலாம். இங்கிலாந்து, ஜெர்மனி, அமெரிக்காவில் பெரும்பகுதி மக்கள் படிப்பது அரசின் செலவிலும் பொறுப்பிலும் நடக்கக்கூடிய பொதுப்பள்ளிகளில்தான்.
அரசின் செலவிலும் பொறுப்பிலும் என்று சொல்லாத ஒரு கல்விக்கொள்கை எப்படி நீங்கள் சொல்வதை சாத்தியப்படுத்தும். உலகளாவிய என்பதைவிட நம்மூர் தேவைகளுக்குத் தகுந்தாற்போலத்தான் கல்வி இருக்கவேண்டும். அரசுப் பள்ளிகளுக்கு அனைத்து உதவிகளும் செய்துகொடுத்தால், அங்கு உலகத்தரம் வாய்ந்த குழந்தைகள் உருவாகமுடியும்.
பள்ளிப்படிப்பை எட்டாத அல்லது பாதியில் கைவிட்ட சுமார் 2 கோடி குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்க தேசிய கல்விக்கொள்கை வழிவகைசெய்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளதே?
தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் 99 சதவீதம், அதற்கும் மேல் அனைத்து குழந்தைகளையும் பள்ளிக்கல்வி முறைக்குக் கொண்டுவந்துவிட்டோம். பள்ளிக்கல்வி முறையில் இருந்து விடுபடுகிற குழந்தைகள் இங்கு மிகவும் குறைவு. இந்தியா முழுவதும் அப்படி கிடையாது. அதனால்தான் திரும்பத் திரும்பச் சொல்கிறோம். நாடு முழுவதும் ஒரு கல்விக்கொள்கை என்பது சாத்தியமல்ல.
பள்ளிக்கூட வகுப்பறைகளுக்குள் எல்லோரையும் கொண்டுவந்து உட்காரவைத்துவிடுவேன் என்றெல்லாம் இவர்கள் சொல்லவில்லை. எல்லாவகையான பள்ளிகளையும் கொண்டுவருவார்கள். தொலைதூரக் கல்வி முறையில் குழந்தை படித்தாலும் அதையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறார்கள்.
தற்போதுள்ள 10,+2 பாடத்திட்ட முறை மாற்றப்பட்டு, 14-18 வயதுக்கேற்ற 5 + 3 + 3 + 4 ஆண்டு பாடத்திட்ட முறை அறிமுகப்படுத்தப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த மாற்றம் எதற்காக கொண்டுவரப்படுகிறது?
10,+2 முறையில் யார் வேண்டுமானாலும் ஏணி மாதிரி ஏறி கல்லூரிக்குச் சென்றுவிடுகிறார்கள். தமிழ்நாட்டில் பிளஸ் டூவை பள்ளிக்கல்வியில் வைத்திருக்கிறோம். சில மாநிலங்களில் இன்டர்மீடியட் என்று கல்லூரியில் வைத்துள்ளார்கள். ஜூனியர் காலேஜ் என்கிறார்கள். எல்லோருக்கும் வாய்ப்பு கிடைக்காது என்பதால், நாம் பள்ளிக்கல்வியில் வைத்துள்ளோம். ஏழு கி.மீ. தொலைவில் ஒரு மேல்நிலைப் பள்ளியை உருவாக்கியுள்ளோம்.
இளம்வயதில் அவர்களால் கல்வி பற்றிய முதிர்ச்சியை அடையமுடிவதில்லை. கல்லூரிக்கு வரும்போது தெளிவு பெறுகிறார்கள். சமூகநீதியைப் பற்றிப் பேசுகிறார்கள். சுற்றுச்சூழலைப் பற்றிப் பேசுகிறார்கள். கேள்வி எழுப்பக்கூடிய இந்தக் குழந்தைகள் ஆளும் வர்க்கத்திற்கு ஆபத்தாக இருக்கிறார்கள். எனவே கேள்வி எழுப்பாமல், சந்தைக்குத் தேவையான திறனற்ற கூலித்தொழிலாளி வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
எனவே 10,+2வை உடைத்து ஒவ்வொரு நிலையிலும் தடைகளை வைத்துவிட்டார்கள். இத்தனையும் தாண்டி அவர்களால் ஏணி மாதிரி கல்லூரிக்கோ பல்கலைக்கழகத்துக்கோ போய்விடமுடியாது. அனைவருமே உயர்கல்விக்கு வரவேண்டிய அவசியமில்லை என்ற சிந்தனையோடு உருவாக்கப்பட்ட கல்விக்கொள்கையாகத்தான் இதைப் பார்க்கிறோம்.
3, 5, 8 ஆம் வகுப்புகளில் அனைத்து மாணவர்களும் அதற்குரிய ஆணையம் நடத்தும் பள்ளித்தேர்வுகளை எழுதுவார்கள் என்று கூறப்படுகிறது. இது தொடக்கப்பள்ளிகளில் கற்றலின் தரத்தை உயர்த்தும் நோக்கமா?
கற்றலின் தரத்தை உயர்த்தவேண்டும் என்றால், அந்தக் குழந்தைக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுக்கவேண்டும். ஒவ்வொரு குழந்தையோடும் உரையாட வேண்டும். அந்தக் குழந்தை ஒரு பாடத்தையோ எண்ணையோ எழுத்தையோ கற்றுக்கொள்ள முடியவில்லை என்றால், ஏன் முடியவில்லை, சிக்கல் என்ன என்பதைக் கண்டறியவேண்டும். அவற்றைக் களைவதற்கு உண்டான சூழல்களை உருவாக்கவேண்டுமே தவிர, ஒரு தேர்வு நடத்தி என்ன செய்யப்போகிறீர்கள்.
மூன்றாம் வகுப்பில் தேர்வு நடத்தி உனக்குத் திறனில்லை என்று பதிவு செய்வது தேவையா? மதிப்பெண்கள் கிடையாது. பெற்றோர்களுக்கும் சொல்லப்போவதில்லை. பள்ளியும் ஆசிரியர்களும் அரசும் தெரிந்துவைத்திருப்பார்கள். அந்தப் பள்ளி வேண்டுமா என்று முடிவு செய்வதற்கும், ஆசிரியர்களை வீட்டுக்கு அனுப்புவதற்கும் ஒரு மாணவனை் பலியாக்க வேண்டுமா? குறிப்பாக குழந்தைப்பருவத்தில் தேர்வு என்பது நிச்சயமாக அறிவை அளக்கக்கூடிய கருவியல்ல.
உயர்கல்வியில் முதலாம் ஆண்டு படித்தால் ஒரு சான்றிதழ், இரண்டாம் ஆண்டு படித்தால் டிப்ளமோ என்பதைப் புரிந்துகொள்ளமுடியவில்லையே? எதற்காக இப்படி மாற்றப்படுகிறது?
நீங்க பிஏ படிச்சிட்டு யுபிஎஸ்சி எழுதிவிட்டு உயர் பொறுப்புகளுக்கு வர ஆசைப்படுகிறீர்கள். நீங்கள் டிகிரி முடித்தால்தானே யுபிஎஸ்சிக்கு வருவீங்க. இனிமேல் யுபிஎஸ்சி எழுதித்தான் ஐஏஎஸ் ஆகவேண்டும் என்ற அவசியமே கிடையாது. இனிமேல் கார்ப்பரேட்ல பிரைவேட்ல சிஇஓவாக, எக்சிகியூட்டிவ்வாக இருந்தவர்களை லேட்டரல் என்ட்ரியில் ஐஏஎஸ்களாக நியமனம் செய்ய ஆரம்பித்துவிட்டோம். செருப்புத் தைக்கிற தொழிலாளியின் குழந்தை ஐஏஎஸ் ஆகிவிட்டார், ரிக்சா ஓட்டுகிறவர் ஐஏஎஸ் ஆகிவிட்டார் என்று இனிமேல் பத்திரிகைகளில் செய்தி படிக்கமுடியாது.
கல்லூரிக்கு வருகிற ஒரு மாணவன் படிப்பை முடித்துவிட்டுச் செல்லத்தான் உதவவேண்டும். நீ எந்த நிலையில் வேண்டுமானாலும் வெளியே போய்க்கொள்ளலாம் என்றால், என்ன அர்த்தம். ஒடுக்கப்பட்ட இடத்தில் இருந்து, வறுமையில் இருந்து வரக்கூடியவர்கள் முதலாமாண்டில் சிறப்பாக படிக்கமுடியாமல் அடுத்த ஆண்டு படிக்க நேரலாம். ஒருமுறை வெளியே போய்விட்டால், மீண்டும் அவர்கள் கல்லூரிக்குள் வரும் வாய்ப்புகள் மிகவும் குறைவு.
இந்திய உயர்கல்விக்கான ஆணையம் உருவாக்கப்படும் என்று கொள்கையில் உள்ளது. இதனால் உயர்கல்வி வாய்ப்புகள் அதிகரிக்குமா?
தமிழகத்தில் இருக்கும் பல்கலைக்கழகங்களை அழிக்கின்ற வாய்ப்பு. எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது 1982ல் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. உயர்கல்விக்குத் தேவையான பாடநூல்களை எழுதுவதுதான் அதன் நோக்கமாக இருந்தது. அதன் விளைவாக, பொறியியல் கல்வியில் சில பாடப்பிரிவுகளை தமிழ்வழியில் அறிமுகம் செய்தார்கள்.
தமிழில் மருத்துவம், சட்டம் தொடர்பான நூல்களை உருவாக்கினார்கள். ஒரு மொழி வளர்ச்சிக்காக ஒரு பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. இந்தக் கொள்கையில் இனிமேல் எந்த முடிவையும் எடுக்கும் உரிமை மாநில அரசுக்குக் கிடையாது. பல்கலைக்கழகங்களை ஒழுங்குபடுத்தவேண்டிய விதிகள் அனைத்தையும் மத்திய அரசு உருவாக்கும். இது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது. தனக்கு அதிகாரமே இல்லாத விஷயத்தில் அதிகாரம் செலுத்துவதற்கு இந்த கொள்கையின் மூலமாக மத்திய அரசு முயற்சி செய்கிறது.
தமிழகத்தில் மும்மொழிக் கல்விக்கு இடமில்லை இருமொழிக்கொள்கையே தொடரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பைப் பற்றி…
ஒரு நியாயமான தெளிவான அறிவிப்பாக நான் பார்க்கிறேன். அறிஞர் அண்ணா தொடங்கி செல்வி ஜெயலலிதா வரைக்கும், எம்ஜிஆர் உள்பட ஒவ்வொருத்தரும் சட்டமன்றத்தில் இருமொழிக் கொள்கை தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறார்கள். இருமொழிக் கொள்கை என்பது தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது என்பதை வரலாற்றுரீதியாக முதல்வர் சுட்டிக் காட்டியிருக்கிறார். எனவே அந்தக் கொள்கையில் அவர் உறுதியாக இருக்கவேண்டும்.
கூடுதலாக ஒரு மொழியைப் படிப்பதால் மட்டும் குழந்தை வளர்ச்சி அடையப்போவதில்லை. தமிழ்நாட்டில் இருக்கிற குழந்தைகள் கடந்த ஐம்பது ஆண்டு காலமாக இஸ்ரோ முதற்கொண்டு நாட்டின் பல்வேறு பொதுத்துறையில் மிகச்சிறந்த ஆளுமைகளாக உள்ளனர். எனவே மும்மொழி பற்றி மத்திய அரசு பேசுவது, வேறு சிக்கல்களைப் பற்றி நீங்கள் பேசாமல் இருக்கவேண்டும் என்பதற்காகத்தான்.
தேசிய கல்விக்கொள்கையைப் பொறுத்தவரையில் தமிழக அரசின் கடமையாக எதையெல்லாம் செய்யவேண்டும் என்று விரும்புகிறீர்கள்?
தமிழ்நாட்டுக்கு என ஒரு பாரம்பரியம் இருக்கிறது. பள்ளிக்கல்வியில் தொடங்கி பல்கலைக்கழகம் வரை நாம் உருவாக்கியிருக்கிறோம். பணமே இல்லை என்று சொல்லப்பட்ட காமராசர் காலத்தில் பள்ளிகள் மட்டுமல்ல ஆறு மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. திராவிட கட்சிகள் யாராக இருந்தாலும், அவர்களுடைய மிகப்பெரிய கொடை, தமிழ்நாட்டில் இருப்பதைப்போல அரசு மருத்துவக்கல்லூரிகள் வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது. மருத்துவப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில்தான் முதன்முதலில் உருவானது. மாநில அரசே உருவாக்கிய கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் இங்குதான் அதிகம்.
அதனால்தான் உயர்கல்வியில் 49 சதவீத மாணவர் சேர்க்கையை 2018 – 19 ஆம் ஆண்டிலேயே நாம் அடைந்துவிட்டோம். தேசிய கல்விக்கொள்கையில் 2035ல் 50 சதவிகிதம் உயர்கல்வி மாணவர் சேர்க்கையை அடையவேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. நாமோ பதினைந்து ஆண்டுகள் முன்னே இருக்கிறோம்.
தமிழகத்தின் கல்வி உரிமைகளைப் பறிக்கும் நோக்கத்துடன் உள்ள தேசிய கல்விக்கொள்கையை நிராகரிக்கவேண்டும். கூடுதலான நிதியை அரசுப் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் செலவிட்டு, ஒரு வலுவான பொதுக்கல்வி முறையின் மூலமாக அனைவருக்கும் கல்வியைக் கொடுப்பதற்கு தமிழக அரசு முன்வரவேண்டும்.