அனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்துவிட்டு ஏதாவது காரணம் கூற முடியாது என பெங்களூர் அணியின் கேப்டன் கோலி தெரிவித்துள்ளார்.
டெல்லி அணிக்கு எதிரான போட்டியை இன்று 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணி தோற்றுள்ளது. அந்த அணி தோற்ற போதிலும் கேப்டன் கோலி மட்டும் போராடி 41 (33) ரன்கள் எடுத்தார். போட்டி முடிந்த பின்னர் பேசிய விராட், “நாங்கள் 160 ரன்கள் வரும் என்று நினைத்தோம். ஆனால் 150 ரன்கள் தான் அடித்தோம். எங்களுக்கு தெரியும் இது பொறுமையான ஆட்டம் தான். கடந்த போட்டியை போன்றே இதுவும் மோசமான போட்டி தான். 150 என்பது கடினமான இலக்கு, ஆனால் நமக்கு வாய்ப்பு கிடைக்கும் போது அதை சரியாக பயன்படுத்த வேண்டும். ஸ்ரேயாஸ் ஐயர் 4 ரன்களில் இருக்கும் போது அவரது கேட்சை விட்டு விட்டனர்.
வாய்ப்பு கிடக்கும்போது போது தவறிவிட்டால் திட்டமிட்ட பாதையில் பயணிக்க முடியாது. அனைத்து போட்டிகளிலும் தோற்றுவிட்டு ஏதாவது காரணம் சொல்ல முடியாது. நாங்கள் மீண்டும் ஒருமுறை சொதப்பியுள்ளோம். மைதானம் எங்களுக்கு சாதகமாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும். எங்கள் அணியை பற்றி சொல்வதற்கு எதுவும் இல்லை. எங்கள் அணியினரிடம் பொறுப்புடன் இருங்கள் என ஏற்கனவே கூறியுள்ளேன். இத்தனை போட்டிகளில் தோற்றுவிட்டோம் என எண்ணினால், இனிவரும் போட்டிகளில் சிறப்பாக விளையாட முடியாது. எனவே கிரிக்கெட்டை மகிழ்ச்சியுடன் விளையாடுவோம்” என்றார்.