முடிவுக்கு வரும் அனுமதி பிரச்னை - ஐபிஎல் தொடருக்காக திறக்கப்படும் சேப்பாக்கம் கேலரிகள்

முடிவுக்கு வரும் அனுமதி பிரச்னை - ஐபிஎல் தொடருக்காக திறக்கப்படும் சேப்பாக்கம் கேலரிகள்
முடிவுக்கு வரும் அனுமதி பிரச்னை - ஐபிஎல் தொடருக்காக திறக்கப்படும் சேப்பாக்கம் கேலரிகள்
Published on

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத ஐ, ஜே மற்றும் கே கேலரிகள் ஐபிஎல் போட்டிகளுக்காக திறக்கப்படும் என்று மெட்ராஸ் கிரிக்கெட் கிளப்பின் தலைவர் ஆர்.ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பழமையான கிரிக்கெட் மைதானங்களில் ஒன்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானம். மாநில அரசுக்கு சொந்தமான இந்த மைதானத்தின் பராமரிப்பு மற்றும் நிர்வாகத்தை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (டிஎன்சிஏ) குத்தகைக்கு எடுத்து நிர்வகித்து வருகிறது. குத்தகை காலம் அண்மையில் முடிந்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவராக ரூபா குருநாத், செயலாளராக ஆர். எஸ்.ராமசாமி ஆகியோர் பதவியேற்றனர்.

இந்நிலையில், குத்தகை காலத்தை நீட்டிக்கவும், திறக்கப்படாமல் உள்ள மூன்று காலரிகள் பிரச்னைக்கு தீா்வு காணவும் முதல்வா் எடப்பாடி பழனிசாமியிடம் கோரியிருந்தனா். இதன் தொடா்ச்சியாக சேப்பாக்கம் மைதானத்தின் குத்தகை காலத்தை மேலும் 21 ஆண்டுகளுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, ஐ, ஜே மற்றும் கே உள்ளிட்ட மூன்று கேலரிகளை திறக்கும் பணியில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தீவிரம் காட்டி வருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐ, ஜே, கே என மூன்று கேலரிகள் இப்போது வரை பயன்பாட்டில் இல்லை. இவற்றில் மொத்தம் 12000 பார்வையாளர்கள் அமரலாம். கடந்த 2012 முதல் இப்பிரச்னை நீடித்து வருகிறது. சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையத்தின் விதிகளின்படி, மைதானத்தில் உள்ள அந்த கேலரிகள் இடையிலான இடைவெளி 8 மீட்டராக இருக்க வேண்டும். ஆனால், இடைவெளி 5.4 மீட்டர்களாக மட்டுமே உள்ளது. அதனால், அந்த கேலரிகளுக்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அனுமதி வழங்கவில்லை.

இந்நிலையில் எம்சிசி கிளப் மற்றும் கே மாடம் ஆகியவற்றின் இடைவெளியை அதிகரிக்க மைதானத்தில் உள்ள உடற்பயிற்சிக் கூடத்தை இடித்து விட தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது. இதனையடுத்து, சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையத்திடன் அனுமதி கோர முடிவு செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரியில் உடற்பயிற்சிக் கூடத்தை இடித்துவிட்டு, மார்ச் இறுதியில் தொடங்கவுள்ள ஐபிஎல் போட்டியின்போது மூன்று கேலரிகளையும் திறந்துவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து ஸ்போர்ட்ஸ் ஸ்டார் இதழ்க்கு பேட்டியளித்துள்ள மெட்ராஸ் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ஆர்.ரமேஷ் " சென்னை மாநகராட்சி மற்றும் சிஎம்டிஏ-விடம் உடற்பயிற்சி கூடத்தை இடிக்க அனுமதி கேட்டு விண்ணப்பிக்க இருக்கிறோம். மெட்ராஸ் கிரிக்கெட் கிளப்பில் இருக்கும் உடற்பயிற்சி கூடம் புராதான கட்டடத்தில் சேராது. பிப்ரவரி மாதம் இவை இடிக்கப்பட்டு பிரச்னை தீர்க்கப்படும். பின்பு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கு மூடப்பட்டிருந்த கேலரிகள் ரசிகர்களுக்கு திறக்கப்படும். ஐபிஎல் மட்டுமல்லாமல் சர்வதேச போட்டிகளுக்கும் கேலரிகள் ரசிகர்களுக்காக தொடர்ந்து திறக்கப்படும்" என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com