உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 469 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் டிராவிஸ் ஹெட் 163 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 121 ரன்களும் குவித்தனர். இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதனைத்தொடர்ந்து களம் இறங்கிய இந்திய அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் கேப்டன் ரோகித் சர்மா 15 ரன்களிலும், சுப்மன் கில் 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 14 ரன்களும், புஜாரா 14 ரன்களும் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். 4 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறிய நிலையில், அடுத்து களமிறங்கிய ஜடேஜா மற்றும் ரஹானே இருவரும் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
கம்மின்ஸ் வீசிய பந்தில் ரஹானேவுக்கு எல்.பி.டபிள்யூ. முறையில் அவுட் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து ரஹானே ரிவ்யூ எடுத்தார். நல்ல வேலையாக அந்த பால் நோ பால் என அறிவிக்கப்பட்டது.
அரை சதத்தை நோக்கி முன்னேறிய ஜடேஜா 48 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதைத்தொடர்ந்து இந்திய அணி 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் குவித்துள்ளது. ரஹானே (29 ரன்கள்) மற்றும் பரத் (5 ரன்கள்) களத்தில் உள்ளனர்.
வழக்கம் போல் முக்கியமான போட்டியில் ரோகித் சர்மா சொதப்பியதால் இந்திய அணி தடுமாறி வருகிறது. அதேபோல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம், ஐபிஎல் தொடரில் 3 சதம் என பட்டையை கிளப்பிய சுப்மன் கில் 13 ரன்களில் போல்டாகி வெளியேறியது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்தது.
இந்நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், ''சிறந்த ஃபார்மில் இருந்துவரும் சுப்மன் கில் தவறான கணிப்பால் விக்கெட்டை இழந்துள்ளார் என்று நினைக்கிறேன். அவரது விக்கெட் இழப்பு அணிக்கு பெருத்த அடிதான். ஐபிஎல் தொடரில் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடவில்லை. அதனால், அவர் லைன் முழுவதும் விளையாடுவது ஆச்சரியமாக இல்லை. ரோகித் சர்மா பழைய ஃபார்முக்கு திரும்ப போராடி வருகிறார். புஜாரா ஸ்டம்பை கவர் செய்து ஆடாமல் விக்கெட்டை இழந்துவிட்டார். இதெல்லாம் தவிர்க்கக்கூடிய விக்கெட்.
ஆஸ்திரேலிய பவுலர்கள் நன்றாக லெந்த் பந்து வீசினர். இது அடிக்கக்கூடிய பந்து என பேட்ஸ்மேன்களை நினைக்க வைத்தனர். நீங்கள் எவ்வளவு நன்றாக இருந்தாலும், ஆஃப் ஸ்டம்ப் எப்போதும் கொஞ்சம் நிச்சயமற்றதாகவே இருக்கும்.
ரஹானே ஐபிஎல்லில் இருந்தே நல்ல ஃபார்மில் இருக்கிறார். வித்தியாசமான ரஹானேவை இப்போது பார்க்கிறோம். அவர் டெஸ்ட் வீரராக மறுபிறவி எடுத்தது போன்றே இருக்கிறது. சரியாகச் சொன்னால், அவர் கடைசியாக 2022 ஜனவரியில் நியூசிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாடினார். பிறகு இப்போதுதான் அணிக்கு விளையாடுகிறார். நல்ல நிலையில் அவர் இப்போது இருக்கிறார். கம்மின்ஸ் வீசிய பந்து நோ-பால் என அறிவிக்கப்பட்டது ரஹானேவுக்கு வாய்த்த அதிர்ஷ்டம். டெஸ்டில் ஒவ்வொரு ஷாட்டுக்கும் சிறிய அதிர்ஷ்டம் தேவை. அவர் தொடர்ந்து ஆடி இந்திய அணியை ஆஸ்திரேலியாவின் மொத்த எண்ணிக்கைக்கு நெருக்கமாக கொண்டு செல்வார் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.