அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஜிம்பாப்வே அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் பங்கேற்றது. கிரிக்கெட் வரலாற்றில் வடக்கு அயர்லாந்தில் நடக்கும் முதல் டெஸ்ட் போட்டி இதுவாகும்.
இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 210 ரன்களை எடுத்தது. அயர்லாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 250 ரன்களை எடுத்தது.
ஜிம்பாப்வே அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 197 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்பின்னர் 158 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய அயர்லாந்து அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் சுவாரஸ்மான சம்பவம் நிகழ்ந்தது. நான்காவது நாள் போட்டியில் அயர்லாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடிக்கொண்டிருந்தது. முன்னதாக அயர்லாந்தில் டார் ஆர்டர் மிடில் ஆர்டர் என தொடர்ச்சியாக 5 பேட்ஸ்மேன்கள் 10 ரன்களுக்குள் வெளியேறி இருந்தனர். இதில் 3 பேர் டக் அவுட் ஆனார்கள். பின் இணைந்த விக்கெட் கீப்பர் டக்கர் மற்றும் மெக்ப்ரைன் இணைந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
நான்காவது நாளில் இரண்டாவது இன்னிங்ஸின் 18 ஆவது ஓவரை ஜிம்பாப்வே வேகப்பந்து வீச்சாளர் கரவா (Ngarava) வீசினார். இரண்டாவது பந்தை எதிர்கொண்ட மெக்ப்ரைன் கவர் திசையில் பந்தைத் தட்ட அது பவுண்டரி லைனுக்கு ஓடியது. பந்தை விரட்டிய டெண்டாய் சதாரா எல்லையில் பந்தைத் தடுத்தார். சதாரா வேகமாக ஓடிச் சென்றதால் தடுப்புகளுக்குப் பின்னால் சென்றுவிட்டார். வேறு எந்த பீல்டரும் அப்போது அருகில் இல்லாததால், சதாராவே மீண்டும் வந்து பந்தை எடுத்து வீசினார்.
ஆனால், அதற்குள்ளாக பேட்டர்கள் 5 ரன்களை ஓடிவிட்டனர். பவுண்டரியைத் தடுக்கப்போய் 5 ரன்களை ஜிம்பாப்வே அணியினர் விட்டுக்கொடுத்துவிட்டனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.