ஜிம்பாப்வே அணி ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணிலேயே தோற்கடித்து வரலாற்று சாதனை படைத்திருக்கிறது.
ஜிம்பாப்வே அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடங்கிய ஒருநாள் தொடரில் முதல் மற்றும் இரண்டாவது போட்டிகளை ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட்டுகள் மற்றும் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் தொடரின் கடைசி போட்டியான மூன்றாவது போட்டி டவுன்ஸ்வில்லே மைதானத்தில் இன்று காலை 9.40 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற ஜிம்பாபே அணி ஆஸ்திரேலிய அணியை பேட்டிங்க் செய்யுமாறு அழைத்தது. மூன்றாவது போட்டியையும் எளிதாக வென்றுவிடலாம் என்று நினைத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய வீரர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார் ஜிம்பாப்வே அணியின் வேகப்பந்துவீச்சாளர் ரிச்சர்ட் இங்கராவா.
தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வாரனர் மற்றும் ஃபின்ச் இருவரும் களமிறங்கி ஆட்டத்தை தொடர்ந்தனர். ஆஸ்திரேலியா 9 ரன்கள் அடித்திருந்த நிலையில் 5ஆவது ஓவரில் கேப்டன் ஃபின்ஞ் விக்கெட்டை எடுத்து பெவிலியன் அனுப்பினார் ரிச்சர்ட் இங்கராவா. அடுத்து களமிறங்கிய ஸ்மித் விக்கெட்டையும் உடனே எடுத்து மேலும் அதிர்ச்சி கொடுத்தனர் ஜிம்பாபேவின் வேகப்பந்துவீச்சாளர்கள். அடுத்தடுத்த களமிறங்கிய விக்கெட் கீப்பர் அலக்ஸ் கேரி, ஸ்டொய்னிஸ், மற்றும் மேக்ஸ்வெல் அனைவரும் சொர்ப்ப ரன்களிலேயே அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர். 129 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது ஆஸ்திரேலிய அணி.
ஒரு புறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுபுறம் நிலைத்து நின்று விளையாடிய டேவிட் வார்னர் 50 ரன்களை கடந்து களத்தில் நின்றிருந்தார். அணியின் ஸ்கோரை ஒரு நல்ல ஸ்கோருக்கு உயர்த்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 14 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் விளாசி 94 ரன்கள் அடித்திருந்த நிலையில் ரியான் பர்ல்லின் சுழலில் சிக்கி விக்கெட்டை இழந்தார் டேவிட் வார்னர். பின்னர் மற்ற விக்கெட்டுகளையும் தட்டி தூக்கிய ரியான் பர்ல் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்தார். இறுதியில் 141 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது ஆஸ்திரேலிய அணி.
142 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய ஜிம்பாபே அணி, 39 ஓவர்கள் முடிவில் இலக்கை எட்டி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. ஜிம்பாபே அணியின் கேப்டன் ரெகிஸ் சகப்வா இறுதிவரை நிலைத்து நின்று ஆடி 37 ரன்கள் அடித்து அணிக்கு வெற்றியை தேடித்தந்தார்.
இதுவரை ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு விளையாடியிருக்கும் ஜிம்பாபே அணி, முன்னர் நடந்த 13 போட்டிகளில் 12ல் தோல்வி அடைந்தும், ஒரு போட்டியில் முடிவு தெரியாமலும் இருந்தது.
இந்நிலையில் வரலாற்றில் முதல்முறையாக ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணிலேயே தோற்கடித்து சாதனை படைத்திருக்கிறது ஜிம்பாப்வே அணி.