முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுதிர் நாயக், நேற்று முன்தினம் மும்பையில் காலமானார். 78 வயதான சுதிர் நாயக், 1974-75 ஆண்டுகளில் டெஸ்ட் போட்டிகளிலும், ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியிருக்கிறார்.
இவரது மரணம் குறித்து அவரது மகள் அளித்துள்ள தகவலின்படி, அவர் சமீபத்தில் பாத்ரூமில் வழுக்கி விழுந்து, அதனால் கோமா நிலையில் இருந்ததாக தெரிகிறது. சிகிச்சை பலனின்றி கோமாவிலேயே அவர் உயிர் பிரிந்திருப்பதாக அவர் மகள் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சுதிர் நாயக்குடனான தனது நினைவுகளை, இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கான் நெகிழ்ச்சியுடனும் வேதனையுடனும் ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார்.
அதன்படி, முதன்முதலில் 1996-ல் சுதிர் நாயக்கை தான் சந்தித்தது ஏப்ரல் மாதத்தில்தான் என்றும், இப்போது அதே போன்றொரு ஏப்ரலில் இப்படியொரு சம்பவம் நடந்துவிட்டதென்றும் கனத்த இதயத்துடன் உணர்வுப்பூர்வமாக பகிர்ந்திருக்கிறார் ஜாகிர் கான்.
மறைந்த சுதிர் நாயக் குறித்து, அவருக்கே கடிதம் எழுவதுபோல எழுதியிருக்கிறார் ஜாகிர் கான். அந்த கடிதத்தின் விவரம் பின்வருமாறு:
“1996 கோடை காலம் அது! 18 வயதில், அப்போதுதான் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியிருந்தேன். கிரிக்கெட்டின் மீது கொண்டு ஆர்வத்தால், சொந்த ஊரான ஸ்ரீராம்பூரிலிருந்து மும்பைக்கு பயணித்திருந்தேன். அடுத்து பொறியியல் படிப்பில் சேரவேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனாலும் இன்னொரு பக்கம் ப்ரொஃபெஷனல் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற ஆர்வமும் என்னுள் நிறைந்திருந்தது.
அதனால் நானும் என் அப்பாவும் ஒவ்வொரு மைதானங்களாக சென்றுகொண்டே இருந்தோம். எல்லா இடங்களிலும் அதிக பணம் கேட்டார்கள். ஒருகட்டத்தில் National Cricket Club-ல் சேர்ந்தேன். அங்கு என்னுடைய பயிற்சியாளராக சுதிர் நாயக் சார் இருந்தார். அங்கிருந்துதான் என் வாழ்வு மாறத்தொடங்கியது. அவர் இந்திய அணிக்காக விளையாடிவர் என்பதால், எனக்கு அவர் மேல் அன்றே மிகுந்த மரியாதை ஏற்பட்டுவிட்டது.
அவர் (சுதிர்) முன் 3 – 4 ஓவர்களுக்கு பந்துவீசி காட்டினேன். அதற்கு பின் சுதிர் சார் என்னிடம் பேசினார். அவர் அன்று பேசியது எல்லாமே, இப்போதும் என் நெஞ்சில் அப்படியே நினைவாக இருக்கிறது.
அன்று அவரிடம், நான் கிரிக்கெட் விளையாடுவதற்கு என் முழு ஒத்துழைப்பையும் தருவேன் என்று உறுதியளித்தேன். பொறியியல் படிப்பில் சேர்வதை தள்ளிவைக்கிறேன் என்றும் கூறினேன். அதைக்கேட்டு அவர், என்னை இந்திய அணியில் சேர்க்க கேப்டனிடம் சொல்வதாக சொன்னார்.
சமீபத்தில் அவரை மருத்துவமனையில் சந்தித்தபோது, அந்த நினைவுகளெல்லாம் என் மனதில் மீண்டும் வந்தது. அன்று அதிகபட்சம் 15 – 20 நிமிடங்கள் மட்டுமே என்னை பார்த்திருப்பார். அந்த சில நிமிடங்களில் என்னிடம் அவர் அப்படி என்ன ஆற்றலை கண்டிருப்பார் என்ற கேள்வி இப்போதும் எனக்கு உள்ளது.
அன்றைய தினம் அவர் எனக்கு அளித்த நம்பிக்கையும் தைரியமும்தான் அதன்பின் என்னை கிரிக்கெட்டை தொடர வைத்தது.
இன்ஜினியரிங்கையும் அதுதான் விட வைத்தது. அந்த நேரத்தில் நான் பொருளாதார ரீதியாக முன்னேறவும் சுதிர்சார் தான் உதவி செய்தார். அதற்காக அவர் எனக்கு பார்ட்-டைம் வேலை வாங்கிக்கொடுத்தார். ஒருகட்டத்தில் என் பெற்றோரே என்னை கிரிக்கெட்டை விடசொன்னபோதும், சுதிர் சார் தான் என்மீது நம்பிக்கை வைத்து நான் ரிலாக்ஸாக கிரிக்கெட் விளையாட உதவினார்.
நானே எனக்குள் காணாத ஒன்றை, சுதிர் சார் என்னிடம் கண்டார். என்னிடம் மட்டுமல்ல… அவர் வாழ்க்கை முழுக்கவே ஒரு பயிற்சியாளராகவும் தேர்வாளராகவும் அவர் பலரின் திறமைகளை கண்டு, அவை வெளிவர உதவியிருக்கிறார். ஒருவரின் திறமையை எளிதில் கண்டுபிடிக்கும் திறன் கொண்டவர் அவர். அப்படியான ஒருவரின் இழப்பென்பது, தனிப்பட்ட முறையில் எனக்கே ஏற்பட்ட இழப்பு.
அவர் எப்போதுமே ஒரு போராளிதான். இந்த முறையும் அவர் போராடி மீண்டு வருவார் என்றே நம்பினோம். ஆனால், இந்த ஏப்ரலில் அது நடக்கவில்லை.
ஜாகிர் கான்
1996 ஏப்ரலில் நடந்த எல்லாமே இப்போது எனக்கு நினைவுக்கு வருகிறது. அன்று என்னை அடையாளம் கண்ட அவருக்கு, இன்று என்னை அடையாளமே தெரியவில்லை.
எங்கிருந்தாலும் எப்போதுமே சுதிர் சார் எனக்கு ஸ்பெஷல்தான்! எப்போதும் நான் உங்கள் மாணவன் மட்டுமே சார்!” என்று உணர்ச்சிப்பொங்க குறிப்பிட்டிருக்கிறார்.
சுதிர் நாயக் குறித்த ஜாகிர் கானின் ட்வீட்டை இங்கே காண்க...