சில கிரிக்கெட் தருணங்களை வாழ்க்கையில் மறக்கவே முடியாது. அது சராசரி கிரிக்கெட் ரசிகனாக இருந்தாலும் சரி ஒரு வீரராக இருந்தாலும் சரி. அப்படிப்பட்ட ஒரு தருணம்தான் 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் யுவராஜ் சிங் 6 சிக்ஸர்களை பறக்கவிட்டது. இந்த நிகழ்வு நடைபெற்று இன்றோடு 13 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால் இந்நாளை இப்போதும் யுவராஜ் சிங் ரசிகர்கள் மட்டுமல்லாது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
2007-ம் ஆண்டு டி 20 உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் பந்துவீச்சில் ஒரு ஓவரின் ஆறு பந்துகளையும் சிக்ஸருக்கு பறக்க விட்டு ஒட்டு மொத்த ரசிகர்களையும் ஆச்சரியத்தில் உறைய வைத்தார். இப்போது இந்தாண்டு இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யுவராஜ் சிங் புகைப்படத்தை பகிர்ந்து நினைவுக் கூர்ந்துள்ளார். அதில் "காலம் எவ்வளவு வேகமாக செல்கிறது, 13 ஆண்டுகால நினைவலைகள்" என பகிர்ந்திருந்தார்.
இதற்கு பதிலளித்த ஸ்டூவர்ட் பிராட் "அன்றைய இரவு பந்து காலத்தைவிட வேகமாக பறந்தது" என நகைச்சுவையாக பதிலளித்திருந்தார். கடந்தாண்டு இந்த சிக்ஸர்கள் குறித்து பேட்டியளித்த யுவராஜ் சிங் "அந்த போட்டியில் நான் களத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் போது பிளிண்டாஃப் என்னை சீண்டினார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த சமயத்தில் ஸ்டூவர்ட் பிராட் பந்துவீச வந்தார். ஏற்கெனவே உத்வேகத்தில் இருந்த என்னை பிளிண்டாஃப் சீண்டல் மேலும் அதிகப்படுத்தியது. அதே உத்வேகத்துடன் ஆறு பந்துகளையும் சிக்ஸர்களாக விளாசினேன்" என கூறியிருந்தார்.
மேலும் "போட்டி முடிந்த அடுத்த நாள் ஸ்டூவர்ட் பிராட் தந்தை கிறிஸ் பிராட் என்னிடம் வந்து தன்னுடைய மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துவிட்டாய் என கூறினார். மேலும் எனது மகனுக்காக உன்னுடைய ஜெர்ஸியில் கையெழுத்திட்டு தருவாயா என கேட்டார். நானும் தந்தேன்" என்றார். யுவராஜ் சிங் சிக்ஸர்கள் விளாசிய ஸ்டூவர்ட் பிராட் அண்மையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனைப்படைத்து குறிப்பிடத்தக்கது.