இந்திய அணி உலகக் கோப்பையில் தோற்றதற்கு அணி நிர்வாகமே காரணம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன்மூலம் கடந்த உலகக் கோப்பை தொடரை போல நடப்பு தொடரிலும் அரையிறுதிப் போட்டியுடன் இந்திய அணி வெளியேறியது. இத்தோல்விக்கு பலர் அணியிலுள்ள வீரர்களின் செயல்பாடுகள் குறித்து கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் இந்திய அணியின் உலகக் கோப்பை தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக யுவராஜ் சிங் டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில், “இந்திய அணியில் நான்காவது இடத்தில் விளையாடுவதற்கு உலகக் கோப்பை தொடருக்கு முன்னரே ஒருவரை அணி நிர்வாகம் தயார்படுத்தியிருக்க வேண்டும். ஏனென்றால் 2003ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கு முன்பு இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாடியது. அந்த சமயத்தில் இந்திய அணி வீரர்கள் சிறப்பாக விளையாடவில்லை. எனினும் அதே வீரர்கள் தான் 2003-ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரிலும் விளையாடினர்.
அதேபோல அம்பத்தி ராயுடுவை இந்திய அணி நிர்வாகம் நடத்திய விதமும் சரியில்லை. நான்காவது இடத்திற்கான போட்டியில் அம்பத்தி ராயுடும்இருந்தார். ஆனால் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் சரியாக விளையாடத காரணத்தினால் அவரை அணியிலிருந்து நீக்கிவிட்டனர். அவருக்கு பிறகு ரிஷப் பந்த் சில போட்டிகளில் நான்காவது இடத்தில் களமிறக்கப்பட்டார்.
அணியில் நான்காவது இடம் மிகவும் முக்கியமான இடம். எனவே அந்த இடத்தில் விளையாடுபவர்கள் மீது அணி நிர்வாகம் அதிக நம்பிக்கை வைத்திருக்க வேண்டும். ஒரு சில போட்டியில் சரியாக விளையாடவில்லை என்பதால் அவரை அணியிலிருந்து நீக்குவது தவறு. மேலும் நான்காவது இடத்திற்காக, இந்திய அணியின் நிர்வாகம் எந்த ஒரு திட்டமும் இல்லாமல் இருந்தது பெரிய தவறு” எனத் தெரிவித்துள்ளார்.