"என்னுடைய கடைசிப் போட்டியில் இப்படி செய்துவிட்டாயே"- இஷாந்த் சர்மாவிடம் கூறிய தோனி!

"என்னுடைய கடைசிப் போட்டியில் இப்படி செய்துவிட்டாயே"- இஷாந்த் சர்மாவிடம் கூறிய தோனி!
"என்னுடைய கடைசிப் போட்டியில் இப்படி செய்துவிட்டாயே"- இஷாந்த் சர்மாவிடம் கூறிய தோனி!
Published on

என்னுடைய கடைசி டெஸ்ட் போட்டியில் இப்படி செய்துவிட்டாயே என்று தோனி என்னிடம் தெரிவித்தபோது நான் அதிர்ந்து போனேன் என்று இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா தெரிவித்துள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3ஆவது மற்றும் பகலிரவு டெஸ்ட் போட்டி இன்று அகமதாபாதில் தொடங்குகிறது. இந்தப் போட்டி வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மாவுக்கு 100 ஆவது சர்வதே டெஸ்ட் போட்டியாகும். முன்னாள் கேப்டன் தோனியின் தலைமையின் கீழ் பல போட்டிகளில் கிரிக்கெட் விளையாடியுள்ளார் இஷாந்த் சர்மா. தோனி 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய பின்பு 2014 இல் டெஸ்ட் போட்டிகளில் இருந்து தன்னுடைய ஓய்வை அறிவித்தார்.

தோனி குறித்து தன்னுடைய அனுபவங்களை அஸ்வினின் யூடியூப் சேனலுக்கு பேசினார் இஷாந்த் சர்மா. அதில் "100 டெஸ்ட் போட்டிகளை நெருங்கும்போது ஓய்வை அறிவித்தார் தோனி. அவர் எப்போதும் அணியின் நலனுக்காகவே தொடர்ந்து இருந்தார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது சாஹாவை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று என்னிடம் தெரிவித்தார். அதனால்தான் திடீரென தன்னுடைய ஓய்வையும் அறிவித்தார் என நான் நினைக்கிறேன்" என்றார்.

மேலும் "தோனி ஓய்வை அறிவித்தபோது நான் மிகவும் சோகமாக உணர்ந்தேன். மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் விளையாடும்போது எனக்கு மூட்டுவலி இருந்ததால் அப்போது நான் ஊசி எடுத்துக்கொண்டு இருந்தேன். அப்போது எனக்கு தெரியாது தோனி பாய் ஓய்வை அறிவிக்கப்போகிறார் என்று. எனக்கு மட்டுமல்ல அணியில் இருக்கும் எவருக்குமே தோனி ஓய்வை அறிவிக்கப்போகிறார் என்பது தெரியாது. அந்த டெஸ்ட் போட்டியின் 4 ஆம் நாள் ஆட்டத்தின்போது தோனியிடம் என்னால் இனிமேலும் ஊசி போட்டுக்கொள்ள முடியாது என்றேன்" என்றார்.

தொடர்ந்து பேதிய இஷாந்த் சர்மா "அப்போது தோனி நீ இனிமேல் பவுலிங் போட தேவையில்லை என்றார். பின்பு சிறிது நேரம் கழித்து என்னிடம் 'நீ இந்த டெஸ்ட் போட்டியில் தனிமையில் என்னை விட்டுவிட்டாய்' என்றார். அவர் ஏன் இதனை சொன்னார் எனக்கு புரியவில்லை. பின்பு அவரே என்னிடம் 'என்னுடைய கடைசி டெஸ்ட் போட்டியில் நடுவிலேயே விட்டுச்சென்றுவிட்டார் என்றார். அப்போது நான் அதிர்ந்துவிட்டேன். இதுதான் கடைசி என்றால் நான் விளையாடி இருப்பேன் என்றேன். இந்தச் சம்பவம் எனக்குள் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது" என்றார் அவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com