“பணத்திற்காக நாட்டை மறந்தீர்கள்” - டிவில்லியர்ஸை விமர்சித்த சோயிப் அக்தர்

“பணத்திற்காக நாட்டை மறந்தீர்கள்” - டிவில்லியர்ஸை விமர்சித்த சோயிப் அக்தர்
“பணத்திற்காக நாட்டை மறந்தீர்கள்” - டிவில்லியர்ஸை விமர்சித்த சோயிப் அக்தர்
Published on

நீங்கள் நாட்டிற்காக ஆடாமல் அதற்குப் பதிலாக பணத்தை தேர்வு செய்தீர்கள் என்று தென் ஆப்பிரிக்கா நட்சத்திர வீரரான டிவில்லியர்ஸை பாகிஸ்தான் முன்னாள் வேகபந்து வீச்சாளார் சோயிப் அக்தர் விமர்சித்துள்ளார். 

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 30ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்கியது. இந்தத் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது. உலகக் கோப்பை வரலாற்றில் தொடர்ந்து மூன்று போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா அணி தோற்றது இதுவே முதல்முறை. 

இதனையடுத்து இந்த உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்கா அணியின் நட்சத்திர நாயகன் டிவில்லியர்ஸ் ஓய்விலிருந்து மீண்டும் வந்து உலகக் கோப்பையில் விளையாட விருப்பம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின. இதற்கு தென் ஆப்பிரிக்கா அணி மறுப்பு தெரிவித்து அனுமதி வழங்கவில்லை என்றும் தகவல் வெளியானது. 

இந்நிலையில் பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் டிவில்லியர்ஸை சாடியுள்ளார். இதுகுறித்து அவர் வீடியோ பதிவை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஐபிஎல் மற்றும் பி.எஸ்.எல் தொடர்களிலிருந்து விலகி உலகக் கோப்பை தொடருக்கு தயாராகுமாறு டிவில்லியர்ஸுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது. ஆனால் டிவில்லியர்ஸ் இதை தவிர்க்கவே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார். அத்துடன் அவர் நாட்டின் பக்கம் நிற்காமல் அதற்குப் பதிலாக பணத்தைத் தேர்வு செய்தார். 

அவர் ஓய்வை அறிவித்த போது தென் ஆப்பிரிக்கா அணி மோசமான கட்டத்தில் இருந்தது. எனினும் இதனைக் கருத்தில் கொள்ளாமல் டிவில்லியர்ஸ் ஓய்வை அறிவித்தார். இந்நிலையில் தற்போது அவர் மீண்டும் உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு விளையாட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளது மிகவும் வருத்தமளிக்கிறது. 

இதேபோன்று இந்தியாவில் நடைபெற்ற ஐசிஎல் தொடரில் விளையாடுவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போது நான் அங்கு சென்று விளையாடுவதை தவிர்த்தேன். அத்துடன் பணத்துக்குப் பதிலாக எனது நாட்டை தேர்வு செய்தேன். எப்போதும் எனது நாட்டிற்காக விளையாடுவதே எனது குறிக்கோளாக இருந்தது. 

அதேபோல டிவில்லயர்ஸும் நாட்டிற்காக விளையாடி இருந்தால் இந்த உலகக் கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி இவ்வளவு மோசமாக தோல்வியடைந்திருக்காது. ஏனென்றால் நடுகள ஆட்டக்காரர் வரிசையில் டிவில்லியர்ஸ் இருந்திருந்தால் அவரது அனுபவமான ஆட்டம் அணிக்கு கை கொடுத்திருக்கும். ஆனால் டிவில்லியர்ஸ் அதை செய்யவில்லை” எனத் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com