கிரிக்கெட் வீரர்களுக்கு பிட்னஸ் கண்டிப்பாக முக்கியம், ஆனால், யோ-யோ தகுதித் தேர்வு மட்டும் அளவு கோல் இல்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், கபில்தேவ் கூறினார்.
இந்திய கிரிக்கெட் அணியில், ஒவ்வொரு தொடருக்கும் முன்பாக ‘யோ யோ’ என்னும் உடற்தகுதித் தேர்வு வீரர்களுக்கு மேற்கொள்ளப்படு கிறது. இதில் தேர்வு பெற்றால் மட்டும்தான் வீரர்கள் அணியில் இணைய முடியும். ‘யோ -யோ’வில் இந்திய வீரர்கள் தேர்வாக, 16.1 என குறைந்தபட்ச மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. வெளிநாடுகளில் இருந்த இந்த முறையை இந்தியாவுக்குக் கொண்டு வந்தவர், அனில் கும்ப்ளே. அவர் பயிற்சியாளராக இருந்தபோது இந்த முறையை இறக்குமதி செய்தார்!
இதில் தேர்வு பெற முடியாமல் பல வீரர்கள் அணியில் இடம் பிடிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதனால் இந்த யோ - யோ தகுதி தேர்வு, சர்ச்சையை கிளப்பியது. ஃபார்மில் உள்ள வீரர்களை, யோ யோவை காரணம் காட்டி நீக்குவது சரியல்ல என்று முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில், கிரிக்கெட் வீரர்களுக்கு பிட்னஸ் முக்கியம், ஆனால், யோ யோ மட்டுமே அளவு கோல் இல்லை’ என்று கபில்தேவ் கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் மேலும் கூறும்போது, ‘மன ரீதியாக வீரர்கள் தங்கள் பிட்னஸை வைத்துக்கொள்ள வேண்டியது முக்கியம். கிரிக்கெட் பிட்னஸ் என்பது மற்ற எல்லாவற்றையும் விட முக்கியமானது. அது யோ யோ தகுதி தேர்வை விட வித்தியாசமானது. நல்ல தடகள வீரராக இல்லாமல் இருந்தாலும் கிரிக்கெட் அறிவு இருந்தால் போதும். அதுதான் முக்கியம். உதாரணமாக ரவிச்சந்திரன் அஸ்வின், தடகளத்தில் நூறு சதவிதம் சிறந்தவர் இல்லை. ஆனால், சிறந்த ஆட்டக்காரர். சிறப்பாக பந்துவீசக் கூடியவர்.
இவர் யோ யோ டெஸ்ட்டில் தேர்வு பெறவில்லை என்றால், சிறந்த வீரர் இல்லை என்று சொல்லிவிட முடியுமா? சவுரவ் கங்குலியும் சிறந்த அத்லெட் கிடையாது. ஆனால், அவர் சிறந்த கேப்டனாக இருந்தார்’ என்றார்.
பின்னர் அவரிடம், ஆடுகளத்தில் ஆக்ரோஷமாக நடந்து கொள்வது பற்றி கேட்டபோது, ’ஆக்ரோஷத்தை ஆட்டத்தில் மட்டுமே காண்பிக்க வேண் டும். மற்றபடி டிவியில் பார்ப்பதற்காக உங்கள் கோபத்தை காண்பிப்பதில் என்ன இருக்கிறது? ஹர்திக் பாண்ட்யா பற்றி கேட்கிறீர்கள். நான் எப்போதும் சொல்கிறேன், யாரையும் யாருடனும் ஒப்பிடாதீர்கள்.
அது அவர்களை பாதிக்கும். இப்போது பிருத்வி ஷா வந்திருக்கிறார். அவரை அடுத்த சச்சின் என்று சொன்னால், அவரது இயல்பான ஆட்டத்தை அது பாதிக்கும். அதனால் ஒப்பிட்டு பேசாதீர்கள்’ என்றார்.