இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீராங்கனையும், விக்கெட் கீப்பருமான சாரா டெய்லர் தனது இணையர் கர்ப்பமாக இருப்பதை சமூகவலைத்தளத்தில் அறிவித்த நிலையில், அவரை நெட்டிசன்கள் கிண்டல் செய்ததற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
லண்டனைச் சேர்ந்தவரான சாரா டெய்லர், கடந்த 2006-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான 3 வடிவ சர்வதேசப் போட்டிகளிலும், அறிமுகமாகி இங்கிலாந்து அணிக்காக தொடர்ந்து விளையாடி வந்தார். மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் குறிப்பாக மின்னல் வேக விக்கெட் கீப்பிற்காக சிறந்த வீராங்கனையாக அறியப்பட்ட சாரா டெய்லர், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கில்கிறிஸ்ட் உள்பட பலராலும் பாரட்டப்பட்டவர். மன அழுத்தம் காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுப் பெறுவதாக கடந்த 2019-ம் ஆண்டு அறிவித்த சாரா டெய்லர், தற்போது உள்ளூர் கிரிக்கெட் அணிகளின் பயிற்சியாளராக உள்ளார்.
இந்நிலையில், கடந்த 22-ம் தேதி தனது இணையர் டயானா கர்ப்பமாக இருப்பதாகவும், விரைவில் தாங்கள் பெற்றோர் ஆக போவதாகவும், தங்களது முதல் குழந்தையை வரவேற்க ஆவலுடன் உள்ளதாகவும் சமூகவலைத்தளத்தில் புகைப்படத்துடன் அறிவித்தார் சாரா டெய்லர். அவர் அந்தப் பதிவில் “தாயாக வேண்டும் என்பது என் இணையரின் விருப்பமாக இருந்தது. இந்தப் பயணம் எளிதானதல்ல என்பது எனக்குத் தெரியும். எனினும், டயானா இந்த எண்ணத்தை ஒருபோதும் கைவிடவில்லை.
அவர் சிறந்த அம்மாவாக இருப்பார் என்பதை நான் அறிவேன். அதன் ஒரு பகுதியாக நானும் இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இன்னும் 19 வாரங்கள் தான்.. எங்களின் வாழ்க்கை வேறுமாதிரி மாறிவிடும்” என்று குறிப்பிட்டு நெகிழ்ச்சியாக பதிவிட்டு இருந்தார். இதற்கு கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தாலும், நெட்டிசன்கள் கிண்டல் செய்ய ஆரம்பித்தனர்.
இந்நிலையில், சாரா டெய்லர் அதற்கு பதிலளித்துள்ளார். அதில் எனது இணையரின் கர்ப்பத்தை அறிவித்தபோது நெட்டிசன்களின் சில கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. இருந்தபோதிலும், சில கேள்விகளுக்கு மட்டும் பதிலளிக்கிறேன். தெரியாத ஒரு நபரிடமிருந்து தானம் செய்யப்பட்ட விந்தணு பெற்று ஐவிஎஃப் முறையில் தான் இந்த நிகழ்வு நடந்துள்ளது. ஆம் நான் ஒரு தன்பாலின ஈர்ப்பாளர் தான், மிக நீண்ட காலமாக இந்த உறவில் இருக்கிறேன். இது சரியான தேர்வு இல்லையென்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், இதில் நான் காதலுடனும், மகிழ்ச்சியுடனும் இருக்கிறேன், அதுதான் முக்கியம்.
ஒவ்வொரு குடும்பமும் வித்தியாசமானது... அது எப்படி இயங்குகிறது, எப்படி பார்க்கப்படுகிறது என்பதை பொறுத்தது. நீங்கள் ஒருவரைப் பற்றி எடை போடுவதற்கு (judgement) முன், உங்கள் அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள். எங்களது குழந்தை அன்பாகவும் ஆதரவாகவும் இருக்கும் என்று நம்புகிறேன்...
நாம் அனைவரும் வெவ்வேறு நம்பிக்கைகளுடன் வித்தியாசமாக வளர்க்கப்பட்டவர்கள், நான் மற்றவர்களின் மீது எனது கருத்தை திணிப்பதில்லை. இருப்பினும் வெறுப்பு, கேலி, துஷ்பிரயோகம் ஆகியவற்றின் போது மட்டும் எனது கருத்தைச் சொல்லுவேன். நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும் வரை நீங்கள் விரும்பும் நபரை நேசியுங்கள். அன்பையும் ஆதரவையும் அனுப்பிய அனைவருக்கும் நன்றி. காதல் என்பது காதல்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.