தொற்றிக்கொண்ட ஐபிஎல் ஜுரம்: இந்த முறையும் கெத்து காட்டுமா சிஎஸ்கே?

தொற்றிக்கொண்ட ஐபிஎல் ஜுரம்: இந்த முறையும் கெத்து காட்டுமா சிஎஸ்கே?
தொற்றிக்கொண்ட ஐபிஎல் ஜுரம்: இந்த முறையும் கெத்து காட்டுமா சிஎஸ்கே?
Published on

கோடை இன்னமும் கூட தன் முழு வெப்பத்தை காட்ட தொடங்கவில்லை. ஆனால், அரசியல் களத்தில் தேர்தல் சூடுபிடித்து தகித்து கொண்டிருக்க, விளையாட்டு களத்தில் ஐபிஎல் தொடங்குவதால் ரசிகர்களுக்கு "மஞ்சள் ஜுரம்" தொற்றிக்கொண்டது. ஆமாம், ஐபிஎல் தொடரில் அசைக்க முடியாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எப்போதும் இல்லாத அளவுக்கு சில ஆண்டுகளில் வெறித்தனமான ரசிகர்கள் அதிகரித்து இருக்கிறார்கள். இதற்கெல்லாம் ஒரே காரணம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. மேலும் ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணிக்கென பெர்பான்ஸ் ரெக்கார்டு அசைக்க முடியாதது. கடந்த ஆண்டு இரண்டு ஆண்டுகள் தடையையும் தாண்டி சாம்பியன் பட்டம் வென்றது சிஎஸ்கே.

இதனால்தான் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிஎஸ்கே அணியினரின் பயிற்சியை பார்ப்பதற்காகவே 12 ஆயிரம் ரசிகர்கள் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் குவிந்தார்கள். இதற்கெல்லாம் காரணம் 2010, 2011, 2018 சாம்பியன் மேலும் 4 முறை இறுதிச்சுற்று 2008, 2012, 2013, 2015 என ஐபிஎல் போட்டித் தொடரில் அனைத்து அணிகளுக்கும் தண்ணி காட்டும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. பின்பு மற்ற அணிகள் எல்லாம் இளம் வீரர்களை வைத்து விளையாடும் போதிலும், சிஎஸ்கே அணி மட்டும் 35 ப்ளஸ் வீரர்களை வைத்து விளையாடி சாம்பியன் ஆகும். அதேபோல ஷேன் வாட்சன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெற்றாலும் கடந்தாண்டு ஐபிஎல்-லில் அதிரடி காட்டினார்

சிஎஸ்கே அணியின் கெத்து எது ?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிகப்பெரிய பலமாக கடந்த பத்து சீசன்களை கடந்து, தோனி, ரெய்னா, ஜடேஜா, பிராவோ, பாஃப் டூ பிளெஸ்ஸிஸ் போன்ற முக்கிய வீரர்களை தக்க வைத்துள்ளது. 30 வயதை கடந்த அனுபவ வீரர்களில் 11 பேர் இடம்பெற்றுள்ளார்கள். ஐபிஎல் ஏலத்தின் போது சீனியர் அணி எனவும் அழைக்கப்பட்டது. இதனால் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானது. ஆனாலும் சீனியர் வீரர்களை வைத்தே மற்ற அணிகளை புரட்டி எடுத்து சாம்பியன் பட்டத்தை வென்றது சிஎஸ்கே. சிஎஸ்கேவின் பலம் பேட்டிங் அதிக ரன் அடித்தவர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளவர் சுரேஷ் ரெய்னா (4540 ரன்கள்), அவரை தவிர தோனி (3560), வாட்சன் (2622), முரளி விஜய் (2511), ராயுடு (2416) மற்றும் கேதர் ஜாதவ், சாம் பில்லிங்ஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.

அதேப்போல் வேகப்பந்து வீச்சில் பிராவோ, ஷர்துல் தாகூர், லுங்கி நகிடி, மார்க் வுட், மோகித் சர்மா, தீபக் சாஹர் இருக்கிறார்கள். சுழற்பந்து வீச்சுக்கு இம்ரான் தாஹீர், ஹர்பஜன் சிங், ஜடேஜா, கரன் சர்மா ஆகியோரிடமிருந்து பலமான சுழலை எதிர்பார்க்கலாம். பலவீனம் என்று பார்த்தால் அணியில் இடம்பெற்றுள்ள 25 வீரர்களில் 13 பேர் இளம் வீரர்கள். அதில் சிலர் இன்னும் ஒரு ஐபிஎல் போட்டியில் கூட விளையாடவில்லை. உதாரணமாக ஜெகதீசன், மோனு குமார் ஆகியோரை குறிப்பிடலாம்.

சிஎஸ்கே வெற்றி பெறுமா ?

சிஎஸ்கே ரசிகர்களுக்கு எப்போதும் தோனி மீது வானளவிலான நம்பிக்கை இருக்கிறது. அதாவது, எப்படியாவது என்ன மந்திரமாவாது செய்து சிஎஸ்கேவை வெற்றிப் பெற செய்திடுவார் என்பதுதான். ஆனால், யதார்தத்துக்கு யூகித்தால் சிஎஸ்கே அணியின் வெற்றி, ஆடும் லெவனில் இடம்பெறும் வீரர்கள் தனிப்பட்ட பேட்டிங் ஃபார்மை பொறுத்துதான் இருக்கிறது. இதேதான் பவுலர்களுக்கும். கடந்த முறை அசத்திய வாட்சன் இப்போது கலக்குவாரா என சொல்ல முடியாது. எனவே எதிர்பார்ப்புகளை குறைத்து பெங்களூர் அணியுடனான முதல் போட்டியை ரசிக்கலாம், பின்பு சிஎஸ்கே இந்தாண்டு ஐபிஎல் கோப்பையை வெல்லுமா வெல்லாதா என யோசிக்கலாம்.


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com