இந்திய மல்யுத்த கூட்டமைப்பு நிர்வாகிகளுக்கான தேர்தல் கடந்த டிச.21ஆம் தேதி டெல்லியில் நடைபெற்றது. தேர்தலில் கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும் வீரங்கனைகளால் பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டவருமான பிரிஜ் பூஷண் சிங்கின் நெருங்கிய உதவியாளரான சஞ்சய் சிங் வெற்றி பெற்றார். அதேநேரத்தில், சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் மல்யுத்தத்தை விட்டுவிலகுவதாக அறிவித்தார்.
அவரைத்தொடர்ந்து மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தனக்கு அளிக்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை பிரதமர் மோடியிடம் திரும்ப ஒப்படைப்பதாகக் கூறி, கடந்த டிசம். 22ஆம் தேதி விருதை பிரதமர் இல்லத்தின் வாசலில் வைத்துவிட்டுச் சென்றார். இவர்களைத் தொடர்ந்து தங்களுடைய விருதுகளைத் திரும்ப ஒப்படைப்பதாக சிலர் அறிவித்தனர்.
இதையடுத்து, இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் புதிய நிர்வாகிகள் விஷயத்தில் நிலவும் கடும் அதிருப்தி காரணமாக, அந்த நிர்வாக அமைப்பை இடைநீக்கம் செய்து மத்திய அரசு அறிவித்தது. மறு அறிவிப்பு வரும் வரை இந்த இடைநீக்கம் தொடரும் என தெரிவிக்கப்பட்டது. இதனிடையே இந்திய மல்யுத்த கூட்டமைப்பை நிர்வகிக்க தற்காலிக அமைப்பை உருவாக்குமாறு இந்திய ஒலிம்பிக் சங்கத்தினை (ஐஒஏ) மத்திய விளையாட்டுத்துறை கேட்டுக்கொண்டது.
அதன்படி, இந்திய ஒலிம்பிக் சங்கம் 3 பேர் கொண்ட குழுவை தற்காலிமாக நியமித்துள்ளது. அந்த வகையில் இந்த தற்காலிகக் குழுவிற்கு வுஷூ அசோசியேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் தலைவர் பூபிந்தர் சிங் பஜ்வா தலைமை தாங்குவார் எனவும், ஒலிம்பிக்கில் ஹாக்கி பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற எம்.எம்.சோமயா மற்றும் பேட்மிண்டன் வீராங்கனையான மஞ்சுஷா கன்வார் ஆகியோர் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.