”பதக்கங்களை கங்கையில் வீசுவோம்..” - முன்னணி மல்யுத்த வீரர்கள் அறிவிப்பு

தாங்கள் வாங்கிய பதக்கங்களை கங்கையில் வீசிவிட்டு, டெல்லி இந்தியா கேட்டில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக முன்னணி மல்யுத்த வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு தொடர்பாக இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கை எதிர்த்து மல்யுத்த வீராங்கனைகள், கடந்த ஏப்ரல் மாதம் முதல் மீண்டும் போராட்டத்தைத் தொடங்கினர். இவர்களுக்கு விவசாய மற்றும் தனியார் அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், டெல்லி ஜந்தர் மந்தரில் போராடிக் கொண்டிருந்த அவர்கள் கடந்த 28ஆம் தேதி, அதாவது புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பின்போது நாடாளுமன்றத்தை நோக்கி அனைவரும் பேரணியாக சென்றனர். அப்போது அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

காவல் துறையினரால் அவர்கள் அப்புறப்படுத்தப்பட்டதுடன், வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. இதையடுத்து, தற்போது அவர்கள் போராட்டத்தை தீவிரமாக்கியுள்ளனர். ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் இன்று (மே 30) மாலை 6 மணிக்கு பதக்கங்களை வீசிவிட்டு, டெல்லி இந்தியா கேட்டில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக முன்னணி மல்யுத்த வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, “எங்களை மகள் என அழைக்கும் பிரதமர் மோடி, எங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து இதுவரை கேட்கவில்லை. துன்புறுத்தல்களுக்கு எதிராகப் பேசினால் சிறையில் அடைக்கிறார்கள். நாங்கள் பெற்ற பதக்கங்கள் இனி எங்களுக்குத் தேவையில்லை. கடுமையான உழைப்பால் கிடைத்த பதக்கங்களை புனித நதியான கங்கையில் வீசுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com