“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!
IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew
நடுநிலையான விசாரணைக்கு அனுமதிக்க வேண்டும் என்று மல்யுத்த வீரர்கள் போராட்டம் குறித்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.
பாஜக எம்பியும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் புகார், மிரட்டல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி பிரபல மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்ஷி மாலிக் உள்ளிட்டோர் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 23-ம் தேதி முதல் இரவு பகலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் போராட்டத்துக்கு விளையாட்டுத்துறையை சார்ந்த பல்வேறு வீரர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் லக்னோவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன. பாரபட்சம் இன்றி டெல்லி காவல்துறை விசாரணையை முடிக்க, மல்யுத்த வீரர்கள் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி நடுநிலையான விசாரணையை முடிக்க அனுமதிக்க வேண்டும். இதுவே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர்களிடம் நான் கேட்டுக்கொள்வது. இந்த விவகாரத்தில் குற்றச்சாட்டு மீது டெல்லி காவல்துறை சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுப்பார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே மல்யுத்த வீரர்களுக்கு அரசியல் கட்சியினர் உட்பட பல தரப்பினரும் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
‘இந்த விவகாரத்தில் நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்’ என மல்யுத்த வீரர்கள் கூறியுள்ள நிலையில், மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் இவ்வாறு தெரிவித்துள்ளது கூடுதல் கவனத்தை பெற்றுள்ளது.