இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவராக நான் இருந்திருந்தால் முகமது ஷமியை புறக்கணித்திருக்க மாட்டேன் என ஆதங்கம் தெரிவித்துள்ளார் ஸ்ரீகாந்த்.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 27ம் தேதி தொடங்க உள்ளது. இத்தொடரில் பங்கேற்கும் ரோகித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அண்மையில் வெளியிட்டது. அதில் கே.எல். ராகுல், விராட் கோலி ஆகியோர் மீண்டும் இடம்பிடித்துள்ளனர். இவர்களுடன் சூரியகுமார் யாதவ், தினேஷ் கார்த்திக், தீபக் ஹூடா, அர்ஷிதீப் சிங் ஆகிய வீரர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேசமயம் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோர் கடைசி நேரத்தில் சந்தித்த காயத்தால் இந்த தொடரிலிருந்து வெளியேறியுள்ளனர். இந்த தொடரில் மூத்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு வாய்ப்பு வழங்கப்படாதது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. முன்னாள் வீரர்கள் பலரும் முகமது ஷமிக்கு இடம் கொடுக்காதது தவறான முடிவு என கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவராக நான் இருந்திருந்தால் முகமது ஷமியை புறக்கணித்திருக்க மாட்டேன் என ஆதங்கம் தெரிவித்துள்ளார், முன்னாள் இந்திய வீரரான ஸ்ரீகாந்த். இது குறித்து ஸ்ரீகாந்த் கூறுகையில், “நான் இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவராக இருந்திருந்தால் நிச்சயமாக முகமது ஷமியை அணியில் இருந்து புறக்கணித்திருக்க மாட்டேன். எனது அணியில் முகமது ஷமிக்கு நிச்சயம் இடம் உண்டு. அதே போல் ரவி பிஸ்னோய்க்கு இடம் கொடுத்திருக்க மாட்டேன்.
அக்ஷர் பட்டேலுக்கு அணியில் இடம் இல்லாதது வருத்தமளிக்கிறது, அஸ்வினுக்கு பதிலாக அக்ஷர் பட்டேலிற்கு இடம் கொடுத்திருக்கலாம். அக்ஷர் பட்டேல் சிறந்த பந்துவீச்சாளர் என்பதைவிட அவர் சிறந்த பேட்ஸ்மேனும் கூட. தீபக் ஹூடாவிற்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி வலுவான அணி தான் என்றாலும், கூடுதலாக ஒரு வேகப்பந்து வீச்சாளர் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி:
ரோஹித் சர்மா, கே.எல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திர அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல், ரவி பிஸ்னோய், புவனேஷ்வர் குமார், அர்ஸ்தீப் சிங், ஆவேஸ் கான்.
இதையும் படிக்க: இந்திய அணிக்கு தங்கம் கிடைக்காமல் போனதற்கு இதுதான் காரணம்! - சர்வதேச செஸ் பயிற்சியாளர்