உலகக் கோப்பை தொடர் கடந்த மாதம் 30ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்தத் தொடரில் இதுவரை மழையால் பல போட்டிகள் ரத்தாகியுள்ளன. அதேபோல், இந்தியா - நியூசிலாந்து இடையிலான முதல் அரையிறுதிப் போட்டியிலும் மழை குறுக்கிட்டுள்ளது. நியூசிலாந்து அணி 46.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்துள்ளது. மழை தொடர்ந்து பெய்ததால், போட்டி ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. மழை விட்டுவிட்டு பெய்வதால் நடுவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
போட்டி ரத்தானால் என்ன ஆகும்?
லீக் போட்டிகள் ரத்தானால் புள்ளிகள் சமமாக பகிர்ந்து அளிக்கப்படும். ஆனால், அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கு மட்டும் ரிசர்வ் தினங்கள் உள்ளன.
அரை இறுதிப் போட்டிகளில் மழை குறுக்கிட்டால் இந்தப் போட்டிகள் ரிசர்வ் நாட்களில் தொடரும். ஆனால் ரிசர்வ் நாட்களிலும் அரை இறுதிப் போட்டிகளை நடத்த முடியவில்லை என்றால் லீக் சுற்று அல்லது கால் இறுதிப் போட்டியில் இந்த இரண்டு அணிகளில் எந்த அணி முதலில் இருந்ததோ அந்த அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். அதேபோல இறுதிப் போட்டியில் மழை குறுக்கிட்டால், இந்தப் போட்டி ரிசர்வ் நாளில் தொடர்ந்து நடைபெறும். அதேசமயம் ரிசர்வ் நாளிலும் மழை பெய்தால், இரு அணிகளும் உலகக் கோப்பையை பகிர்ந்து கொள்வார்கள்.
இந்நிலையில், இந்தியா - நியூசிலாந்து இடையிலான இன்றையப் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டால், நாளை மீண்டும் போட்டி நடைபெறும். நாளையும் மழை குறுக்கிடும் பட்சத்தில் புள்ளிகள் மற்றும் ரன் ரேட் அடிப்படையில் இந்திய அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
மழையால் பாதித்த போட்டியில் சூப்பர் ஓவருக்கு வாய்ப்பு
பொதுவாக சூப்பர் ஓவர் முறை டி20 போட்டிகள் சமனில் முடிவடைந்தால் வெற்றியாளரை தீர்மானிக்க பயன்படுத்தப்படும். உலகக் கோப்பையில் அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டால் சூப்பர் ஓவர் முறை மூலம் வெற்றியாளரை தீர்மானிப்பது அறிமுகபடுத்தப்பட்டுள்ளது. அதன்படி வானிலை சூழல் அனுமதித்தால் சூப்பர் ஓவர் போட்டி நாள் அன்று அல்லது ரிசர்வ் நாளில் நடைபெறும். இதனை நடத்துவது குறித்து போட்டியின் நடுவர் முடிவு செய்வார். இந்த சூப்பர் ஓவரில் இரு அணிகளுக்கும் நடுவரின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய ஒரு ரிவியூவ் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.